* தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
* தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
* நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
* செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பௌர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
* நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
* நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
* குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களையும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத் தர வேண்டும்.
* ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
* வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
* ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
* நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
* பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
* பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
* விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
* வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
* வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
* பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
* பெண்கள் தங்களின் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டினை கட்டாயம் வைக்க வேண்டும். ஶ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சௌபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
* வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
* வீட்டில் துளசியை வளர்ப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும்.
* வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
* சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
* பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.
* பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
* ஸ்வஸ்திக், ஶ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை