சிலம்பம் என்பது தமிழர் தற்காப்பு கலை மற்றும் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாகும். இவ்விளையாட்டு, வழக்கத்தில் கம்பு சுற்றுதல் எனப் பெயர் பெற்றுள்ளது. இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்பு கலை ஆகும்.
சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாத காலம் தேவை. இதற்காக பல சிலம்பாட்டக் கழகங்கள் தமிழகத்தில் உள்ளன.
சிலம்பாட்டம் ஆடுவதற்கு குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர். தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். இக்கலை தென்தமிழகமான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு பழக்கத்தில் உள்ளது.
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.
ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இதுப்போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுதிறன், உடலின் நெகிழ்தன்மை (flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
கருத்துகள் இல்லை