* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : திருமுருகன்பூண்டி
* முகவரி : திருமுருகன்பூண்டி, திருப்பூர்
* தாலுகா : திருமுருகன்பூண்டி
வரலாறு :
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார்.தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார்.இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும் படி முறையிட்டார். தனது தகப்பனின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருள் மீட்டுத் தரும்படி வேண்டினார்.அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.
தலசிறப்பு:
இத்தலத்தின் முதன்மையானவரான சிவன்,முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது.முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு தனது வேலை கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல், தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டு பாடியபோதும், பின்னர் பொருளைத் திரும்பப்பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, அந்தணர்களுக்கு தானமும் செய்தான். அதன் பயனாக அவன் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், நீலகண்டி என்ற திருநாமத்துடன், காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.
கருத்துகள் இல்லை