* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : உறையூர்
முகவரி :
திருச்சியை அடுத்த உறையூரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
அனைத்து கோவிலிலும் அம்மன் சன்னதியில் மேற்கூரை வேய்ந்து காணப்படும். ஆனால் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவிலுக்கு மேற்கூரை கிடையாது. இந்த கோவிலில் இருக்கும் வெக்காளி அம்மன் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் சக்தி படைத்தவள்.
தல வரலாறு:
உறையூரை பராந்தகசோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னரின் ராஜகுரு சாரமா முனிவர் ஆவார். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, அங்கு சிவபெருமானுக்கு பூஜை செய்து கொண்டு வந்தார். அதற்காக நந்தவனத்தில் சுவாமிக்காக ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூடுவதற்காக தினமும் அவனது ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களை சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே பறித்து சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னரிடம் சென்று நாட்டை காக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்து செல்வது முறையா? என முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரின் பேச்சை கேட்கவில்லை. என் மனைவி வைத்தது போக மீதி இருக்கும் பூக்களை உனது இறைவனுக்கு கொண்டு செல் என்று ஆணவத்தோடு பேசினான். அதனால் முனிவர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். சிவபெருமான் கோபத்துடன் கிழக்கு நோக்கி இருந்தவர், மேற்கு முகமாக இருக்கும் உறையூரை நோக்கி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். உடனே உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மன்னனின் கோட்டை சிதைந்தது. மண்ணில் ஊரே புதைந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள், நெருப்பு மழையில் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மனிடம் சென்று தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பி தரும்படி பிரார்த்தனை செய்தனர். வெக்காளி அம்மனும் மக்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, சிவபெருமானின் சினத்தை தணிக்க முழு நிலவாக மாறி, அவர் முன்பு தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொண்டதால் நெருப்பு மழை நின்றது. அன்று உறையூரை காத்த அன்னையை நன்றி உணர்வோடு மக்கள் இன்று வரை வணங்கி வருகின்றனர்.
தல பெருமை:
அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும். உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள். கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள். இந்த கோவில் விமானம் இல்லாத ஒரு கோவிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதம் அசுரனை வாதம் செய்வது போன்ற காட்சி இந்த தலத்தில் தான் உள்ளது.
பிரார்த்தனை :
மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அம்மன் முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.
கருத்துகள் இல்லை