* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : மலைக்கோட்டை
* முகவரி : திருச்சிராப்பள்ளி
* தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன் மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும்.
இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பழமையானது. இம்மலைக்கோட்டையில் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும்.
இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர்காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பீசப்பூர், கர்நாடகம், மராட்டா ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது.
இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு கால் ஊன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.
இவ்விடம் முதன்முதலில் விஜயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது கி. பி 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக்கோயில் ஆகும்.
பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
இதன் பின்னர் இவ்விடம் விஜயநகரப் பேரரசின்கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விஜயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது.
விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுநர்களாகச் செயல்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தனர். இவர்கள் காலத்திலேயே திருச்சிராப்பள்ளி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சிராப்பள்ளியே அவர்களின் தலைநகரமுமானது.
இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார்.
கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளி கோட்டையைக் கைப்பற்றினார். இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.
பல்லவர்களால் சிறு குகைக்கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலை பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜயநகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை