* மாவட்டம் : பெரம்பலூர்
* இடம் : சாத்தனூர் - பெரம்பலூர்
* முகவரி : சாத்தனூர், பெரம்பலூர்
* தாலுகா : பெரம்பலூர்
வரலாறு :
சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. புவியியல் சாத்திரப்படி க்ரிடேஷன் காலம் எனக்கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் பிராணிகளைப் போன்று பலவித பிராணிகள் நிறைய இருந்தன. இப்பிராணிகள் இறந்த பிறகு ஆறுகளிலும் அடித்து வரப்பட்ட மணல் களிமண் இவற்றால் மூடப்பட்டக் கடலின் அடியில் அமிழ்ந்தன. கடலோரப்பகுதிகளிலும் அதன் சமீப இடங்களிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்றுவெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு இப்பிராணிகளுடன் கடலில் அமிழ்ந்து காலப்போக்கில் கல்லுருவாக மாறின.
இங்குக் காணப்படும் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தய திருச்சிராப்பள்ளி பாறையினப்பகுதியில் அமைந்திருக்கின்றது. “ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் ” என இக்காலத்தில் காணப்படும் பூக்கள் தோன்றும் தாவர இனம் தோன்றியதற்கு முன்னால் பெரிதும் காணப்பட்ட அக்காலப் பூக்கள் இல்லாத (தோன்றாத) நிலத்தாவர இனமான “கோனிபர்ஸ்” வகையைச் சேர்ந்ததே இம்மரம்.
இங்குக் காணப்படும் கல்லுருவாகிய அடிமரம் 18 மீட்டர் நீளமுள்ளது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் இவ்வூர்களின் அருகே நீர் ஓடைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள இம்மாதிரியான கல்லுருவாகிய மரங்கள் காணப்படுகின்றன. இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர். எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் 1940-ஆம் ஆண்டில் இக்கல்லுருவாகிய மரம் பற்றி முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை