* மாவட்டம் : பெரம்பலூர்
* இடம் : செட்டிகுளம்
* முகவரி : செட்டிகுளம், பெரம்பலூர்
* தாலுகா : ஆலத்தூர்
வரலாறு :
ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்கவே விழித்தபோது, பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்ததைக் கண்டான். ஆச்சர்யமடைந்தவன், மறுநாள் மன்னன் பராந்தக சோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். லிங்கம் இருந்த இடத்தைத் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, கையில் கரும்புடன் அங்கு வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம், தான் சிவனின் இருப்பிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் லிங்கத்தை காட்டிவிட்டு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். சிவன் ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரராகக் காட்சி தருகிறார்.
கயிலாயத்தில் சிவன் பார்வதி இருக்கும்போது அரக்கர்கள் தொல்லை குறித்து தேவர்கள் முறையிடுகின்றனர். அப்போது அங்கிருக்கும் முருகப்பெருமான் அவர்களை தான் அழித்துவிட்டு வருவதாக தனது தாயார் பார்வதி தேவியிடம் கூறி அவரது கையில் உள்ள சக்தி வேலை வாங்கி செல்கிறார். அசுரர்களை சூரசம்காரம் செய்கிறார். பின்பு சூரசம்காரம் முடிந்ததும் தன் வெற்றியைத் தெரிவிக்க தனது அம்மாவிடம் வருகிறார். தன் வெற்றியை தன் அன்னையிடம் தெரிவிக்கிறார். தன் மகன் பெற்ற வெற்றியை பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டார் பார்வதிதேவி. இந்த வெற்றியின் அடையாளமாக தனது கையிலிருந்த கரும்பை முருகனுக்கு பார்வதி தேவி பரிசாக வழங்கினார். அதை வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் இம்மலையில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.
கருத்துகள் இல்லை