வீடுகட்டிய பின் - வீட்டிற்கு அடிக்கும் நிறத்தின் வண்ணங்கள் என்னென்ன?
* வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!
* ஒரு வீட்டின் தோற்றம் முழுமையடைவதில், நிறங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வண்ணங்கள், நம் வாழ்நாளின் முக்கியக் கதாபாத்திரமாகவே திகழ்கின்றன. யோசிக்கும் திறன், எதிர்வினை மாற்றங்கள் போன்ற செயல்களுக்கு நிறங்களின் பங்கு முக்கியமானது.
* ஒவ்வொருவரின் குணங்களுக்கும் நிறங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. அந்த வகையில், உங்கள் வீட்டுக்குச் சரியான நிறங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்க்கலாம்.
* புதுப்பிக்கவுள்ள வீடாகட்டும், புதிதாகக் கட்டப்பட்ட வீடாகட்டும், ஒரு கோட் `பெயிண்டிங்' அந்த வீட்டின் பொலிவை மெருகேற்றிவிடும். வீட்டுக்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பு, பல காரணிகளை ஆராய்வது அவசியம். எப்போதும் `தரம்' எனும் ஒற்றை விஷயத்தை மட்டுமே பார்த்து `பெயிண்ட்' வாங்கக் கூடாது.
* வீட்டின் அழகியலோடு சுவர்களைப் பாதுகாக்க உதவும் பண்புகளைப் பார்ப்பதும் அவசியம். லட்சக்கணக்கான வண்ணங்களில் சரியான ஷேடுகளைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும், வீட்டில் வசிக்கப்போகும் நபர்களின் விருப்பத்தையும் சரியாகக் கையாள்வது சவாலான ஒன்றுதான்.
* தற்போதுள்ள காலகட்டத்தில் வெளிர் நிற ஷேடுகளைத்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். முன்பெல்லாம் அடர்ந்த மற்றும் பிரைட் நிறங்களில் வீட்டை அழகுபடுத்தினர்.
* ஆனால் இப்போது, `டார்க்' ஷேடுகள் வெளிப்புறச் சுவர்களுக்கானது என்றும், `லைட்' அல்லது வெளிர் நிறங்கள் உள்பகுதிகளுக்குச் சரியானவை என்கிற பிம்பமும் தோன்றியிருக்கிறது. அதிலும் சாம்பல், பீஜ், வெளிர் மஞ்சள், பச்சை, நீலம் போன்ற லைட் ஷேடு நிறங்கள் மட்டுமே பெரும்பாலானோரின் சாய்ஸ்.
* ஒவ்வொரு அறைக்கான நிறத்தைத் தேர்வு செய்யும்போது, கவனமாக இருப்பது அவசியம். நமக்குப் பிடித்த நிறத்தைவிட நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் நிறங்களைத் தேர்வு செய்வதே சிறந்தது.
* அடர்ந்த நிறங்கள், அறையை முற்றிலும் இருளாக்கும். அதிலும், சிறியளவு அறைகளுக்கு அடர்ந்த நிறங்கள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அறையை மேலும் சிறிதாக காண்பிக்கும். வெளிர் நிறங்கள், எப்போதும் அறையின் அளவை நன்கு விரிவுபடுத்தி காண்பிக்கும்.
* பொதுவாக, வீட்டின் உட்புறத்தில் தீட்டப்படும் பெயிண்ட்களை டிஸ்டெம்பர் (Distemper), லஸ்டர் (Luster), எமல்ஷன் (Emulsion) என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
* சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து, வீட்டை வெள்ளையடிக்கும் முறை டிஸ்டெம்பர். தண்ணீரில் கலக்கப்படாத எண்ணெய் சார்ந்த பெயிண்ட், லஸ்டர். இது காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் மற்றும் அதிகப்படியான வாசனையையும் கொடுக்கும். இருப்பதிலேயே, தண்ணீரைச் சார்ந்த எமல்ஷன்தான் பெஸ்ட் சாய்ஸ்.
* மழைக்காலத்தின்போது பூஞ்சை பெருக்கத்தைத் தடுத்து நீண்ட நாள் அழியாமல் இருக்கும் பெயிண்ட் வகை இதுவே.
* வீடு மொத்தத்தையும் ஒரே நிறத்தில் நிரப்புவது, பழைய ஃபேஷன். பொது அறை முதல் சமையலறை வரை வித்தியாசமான நிறங்களால் அழகுபடுத்துவதுதான் இன்றைய இளைஞர்களின் விருப்பம்.
* அந்த வகையில், விருந்தினர் நுழைந்ததும் நோட்டமிடும் லிவிங் ஏரியாவை வெளிர் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணங்களில் நிரப்புவதன் மூலம் மற்றவர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கலாம். இது, எந்த வகையான கட்டமைப்புக்கும் பொருந்தும்.
* தங்களுக்கென தனிப்பட்ட உலகை உள்ளடக்கிய படுக்கை அறைக்கு நிம்மதியாக ஓய்வெடுக்கவும், மனம்விட்டு பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் உதவும் நிறங்களாக பார்த்துத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
* அந்த வகையில், லாவண்டர், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் லைட் ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இயற்கை விரும்பிகள் பச்சை அல்லது நீல நிறங்களையும், புதிதாக திருமணமானவர்கள் பிங்க் நிறத்தையும், அமைதியை விரும்புவோர் லாவண்டர் நிறத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
* எப்போதும் ஒரு பெயிண்டின் நிறத்தைத் தேர்வு செய்வதற்கு முன், இயற்கை வெளிச்சம் எந்த அளவுக்கு அறையில் உள்ளது என்பதைப் பார்ப்பதும் அவசியம்.
* வெப்பம் அதிகமுள்ள சமையலறைக்கு, மனநிலையைக் கட்டுப்படுத்தும் சரியான நிறத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் வெள்ளை அல்லது சாம்பல் நிற ஷேடுகள்தான் சரியான சாய்ஸ்.
* இது மனநிலையை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. வெளிர் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறங்களை, பூஜை அறை அல்லது வயதானவர்கள் தங்கும் அறைகளுக்கு தேர்வு செய்யலாம்.
* வீட்டின் உட்கூரையின் நிறம், சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் நிறத்துக்கு எதிர்மறையாக நிரப்புவதே இப்போதைய ட்ரெண்டு.
* வீட்டுக்குப் பயன்படுத்தும் நிறங்களுக்கு ஏற்றபடி, ஃபர்னிச்சர் மற்றும் அலங்காரப் பொருள்களை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் இல்லத்திற்கு அழகான வண்ணங்களை தேர்ந்தெடுங்கள் :
வீட்டில் வண்ணங்கள் :
* நம் மனநிலை, சிந்தனை, உத்வேகம் ஆகியவற்றை வண்ணங்கள் தீர்மானிக்கும் என்பதை பலர் ஏற்பதில்லை. சரியான வண்ணங்களை உபயோகிப்பதன் மூலம் உங்களின் சிந்தனைகளையும் எண்ணங்களையும் சரியாக நேர்படுத்த முடியும்.
* பெரும்பாலான நேரத்தை நாம் வீட்டில் செலவழிப்பதால், நம் வீட்டில் உபயோகிக்கும் வண்ணங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்மை பயக்கும்.
* வீட்டில் வண்ணம் அடிக்கும் முன், வண்ணங்கள் சார்ந்த சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* ஹுயு (Hue)- ஹுயு என்பது ஒரு வண்ணம். சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்கள் ஹுயு எனப்படும். லைட் அல்லது டார்க் என்பதை பொருத்து இதன் மதிப்பு அமையும்.
* சாசுரேஷன் (Saturation) - ஹுயுவின் ஆதிக்கம் என்பதே சாசுரேஷன். உதாரணத்திற்கு ஒரு அறையில் சிவப்பு நிறமும், பிங்க் நிறமும் நிறைந்து காணப்பட்டால், பிங்க் வண்ணத்தின் ஆதிக்கம் இருக்கும்.
* இன்டன்சிடி (Intensity) - இது வண்ணத்தின் திறமை. கோபால்ட் நீலம் அல்லது அடர்த்தியான சிவப்பு ஆகிய நிறங்கள் லைட் மஞ்சளை விட திறமை அதிகம் உள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டின் வண்ணங்களை தேர்வு செய்ய குறிப்புகள் :
* நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் வண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின்னர் அறைகளுக்கான டிசைன்களை பற்றி முடிவெடுக்கிறோம். இது தவறான அணுகுமுறை. வண்ணத்திற்கு ஏற்ற மாதிரி திரைச்சீலை, உள்அலங்காரங்கள் அமைப்பது கடினம்.
* அதற்கு பதிலாக எல்லாவற்றையும் அமைத்த பிறகு வண்ணமடிப்பது சிறந்தது. திரைச்சீலைகளுக்கு ஏற்றது போல் வண்ணங்களை தேர்ந்தெடுத்தல் மேலும் அழகூட்டும்.
பிடித்த நிறத்தை தேர்ந்தெடுக்காதீர்!
* உங்களுக்கு பிடித்தமான நிறம் என்பதால் உங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் என்றில்லை. ஆகவே உங்களுக்கு பிடிக்கும் என்பதால் வண்ணத்தை தேர்ந்தெடுக்காதீர்கள்.
* உதராணத்திற்கு உங்களின் தூங்கும் அறையை எடுத்துக் கொள்வோம். அந்த அறை அமைதியானதாக இருக்க வேண்டுமா? இல்லை உற்சாகத்தை தரவல்ல நெருக்கத்தை உணர வைக்கும் சூழல் வேண்டுமா? சாஃப்டான குளிர்ச்சியான நிறங்கள் (நீலம், பச்சை) நிம்மதியான சூழலை உருவாக்கும், இதுவே அடர்த்தியான நிறங்கள் (சிவப்பு) இறுக்கமான சூழலை உருவாக்கலாம்.
முழு வீட்டையும் கருத்தில் கொள்ளுங்கள் :
* வீட்டை பெயிண்ட் செய்யும் பொழுது, அனைத்து அறைகளையும் கருத்தில் கொண்டு கலைநயத்தோடு உணருங்கள். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கையில் நிறத்தின் தொடர்ச்சி நேர்த்தியாக அமைகிறதா என்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.
* ஒரு அறையின் நிறத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மன ஓட்டத்தில், அடுத்த அறைக்கான தொடர்ச்சி நிறம் எப்படி அமைய வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். இவை ஒன்றுக்கொன்று எடுபடுமா என்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒற்றை நிறத்தை முயலுங்கள் :
* ஒரு ஹுயு நிறத்தை மட்டும் பயன்படுத்துகையில் அந்த அறையே அழகாக அமையும். அதே சமயத்தில் ஒரு ஹுயு நிறத்தை உபயோகிக்கும் பொழுது அறையின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பூச்சு நிலை கொடுக்கும் பொழுது, நேர்த்தியாக அமையப்பெறும். இது போல் வெவ்வேறு பூச்சு நிலை, அறையின் அழகை உயர்த்திக் காட்டும்.
கலர் வீல் :
* வீட்டில் வண்ணத்தை திட்டமிடுகையில், இந்த நான்கு குறிப்புகளை கருத்தில் கொண்டால் ரம்மியமான அழகை பெறலாம். மேலும், கலர் வீலின் மேற்கோள்படி திட்டமிடலும் நன்மை பயக்கும்.
* கலர் வீலில் அடுத்தடுத்து உள்ள நிறத்தை பயன்படுத்தும் பொழுது, அதில் ஒரு நிறம் மற்றதை விட பளிச்சென்று இருக்கும். சிவப்பு, பச்சை என கலர் வீலில் எதிர் எதிரில் அமைந்துள்ள நிறங்கள் ஒன்றுகொன்று ஈடுகொடுத்து அழகாக அமையும்.
* நிறத்தின் குளிர்ச்சி நிறத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர்ச்சியான நிறத்தை பயன்படுத்தும் பொழுது, அறை காற்றோட்டமாக இருக்கும். சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்கள் பளிச்சென்று தோற்றத்துடன், அதில் வசிப்பவர்களையும் புத்துணர்ச்சியூட்டும்.
சரியான பெயிண்ட்டை தேர்ந்தெடுங்கள் :
* இறுதியாக, சரியான வண்ணத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆயில் அல்லது லேடக்ஸ் பெயிண்ட் என இரண்டு வகை உள்ளது. எதை உபயோகிக்க வேண்டும் என்பது சுவற்றின் தன்மையை பொருத்து முடிவெடுக்க வேண்டும்.
* லேடக்ஸ் பெயிண்ட் இலகுவாக சுத்தப்படுத்த இயலும், ஆயில் பெயிண்ட்டை விட நீடிக்கும் தன்மை வாய்ந்தது. சீக்கிரம் வண்ணத்தை இழக்காது என்பதால் லேடக்ஸ் பெயிண்ட் உபயோகிப்பது நல்லது.
* ஆயில் பெயிண்ட் மரத்திலான மேற்பரப்பு கொண்டவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மரத்தின் மீதான கறை, செதில்கள் போன்றவற்றை மறைக்க ஆயில் பெயிண்ட் உதவும். ஆனால் ஆயில் பெயிண்ட் காய்வதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பளிச்சென இருக்கட்டும் :
* ஒரே மாதிரியான நிறத்தை தேர்வு செய்யாமல், புதிய பளிச்சான நிறத்தை முயற்சி செய்யுங்கள். ஒரு சுவர் என்று ஆரம்பித்து படிப்படியாக கூட புது வண்ணங்களின் முயற்சியை மேற்கொள்ளலாம்.
* இவ்வாறு செய்கையில் முற்றிலும் புதிய விதமான உங்களின் ஸ்டைலை பிரதிபலிக்கும் வீடாக கூட அமையக் கூடும்.
எந்த அறைக்கு என்ன வண்ணம்?
* வீட்டின் அறைகளுக்கு வண்ணம் அடிக்கும்போது, பெரும்பாலானவர்கள் அவர்களுடைய மனதுக்குப் பிடித்த வண்ணங்களை தேர்ந்தெடுப்பார்கள். அப்படியில்லாவிட்டால், எந்த வண்ணம் வீட்டின் அழகை மேலும் மெருகேற்றுமோ அந்த வண்ணத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
* உள்அலங்கார வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு அறைக்கும் அந்த அறையின் தேவைக்கேற்ப வண்ணங்கள் தேர்ந்தெடுப்பதையே பரிந்துரைக்கிறார்கள்.எந்த அறைக்கு எந்த வண்ணம் பொருத்தமாக இருக்கும் என்று பார்க்கலாமா?
அறைக்கு பொருத்தமான வண்ணம் :
படுக்கையறைக்கு பச்சை :
* வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரத்தை ஓய்வெடுப்பதற்கு, புத்துணர்ச்சி பெறுவதற்கு, சிந்திப்பதற்கு எனப் படுக்கையறையில்தான் செலவிடுகிறோம். அதனால், படுக்கையறைக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியின் நிறமாக அறியப்படும் பச்சை நிறத்தைத்தான் பெரும்பாலான வடிவமைப்பாளர்கள் படுக்கையறைக்கு பரிந்துரைக்கிறார்கள். பதற்றத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியை கொடுக்கும் தன்மையுடையது பச்சை நிறம்.
* தூங்கி எழுந்தபின், ஒவ்வொரு நாளையும் காலையில் புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு பச்சை நிறம் உதவும். இயற்கையோடு இணைந்திருப்பதைப் போன்ற தோற்றத்தையும் பச்சை நிறம் கொடுக்கும். அமைதி, ஓய்வு, வசதி, இயற்கை போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் பச்சை நிறத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
* பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் படுக்கையறையின் வண்ணத்தையோ பொருட்களையோ பச்சையாக மாற்றினால் மனதில் ஒருவித அமைதியை உணர்வார்கள்.
* படுக்கையறை என்பது சுவரின் வண்ணம் மட்டுமல்ல. ஆனால் படுக்கை, தலையணைகள், படுக்கை விரிப்புகள், விளக்குகள் என எல்லாவற்றையும் படுக்கையறையை வடிவமைக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
படிக்கும் அறைக்கு நீலம் :
* வீட்டில் படிக்கும் அறைக்கும் அலுவலக அறைக்கும் ஏற்ற வண்ணம் நீலம்தான். ஏனென்றால், இந்த அறைகளில் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டியது முக்கியம். நீல நிறம் பன்முகத் தன்மைகொண்டது. இந்த நிறம் உங்களுக்கு அமைதியையும் ஆற்றலையும் ஒரே நேரத்தில் வழங்கும்.
* நீல நிறம் மனிதர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்று டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிறம் இதயத் துடிப்பைக் குறைத்து உங்களுடைய கவனிக்கும் திறனை அதிகரிப்பதால் வேலையைச் சுலபமாக முடித்துவிடலாம்.
* நீலநிற வானம், கடல், தண்ணீர், சுகாதாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. நீலவானையும் நீலக்கடலையும் பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த விஷயமாகத்தானே இருக்க முடியும்?
சாப்பிடும் அறைக்கு சிவப்பு :
* குடும்பத்துடன் அமர்ந்து உண்பது என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாகவும் ஆர்வத்துடன் உணவைச் சாப்பிட வேண்டும் என்று அனைவருமே எதிர்பார்ப்போம்.
* சிவப்பு நிறம் உற்சாகத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது. பேரார்வம், அன்பு, ஆபத்து போன்ற தன்மைகளுடன் சிவப்பு நிறம் தொடர்புடையது. சிவப்பு நிறம் பசியைத் தூண்டக்கூடியது. அதனால், சிவப்பு நிறத்தை சாப்பிடும் அறையில் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
* குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி அமர்ந்து உரையாடும் இடங்களுக்கு சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். சிவப்பு நிறம் மனிதர்களை உரையாடுவதற்கு தூண்டும். சிவப்பு நிறத்தை மொத்தமாக பயன்படுத்துவதைவிட சிதறல்களாகப் பயன்படுத்தலாம்.
சமையலறைக்கு மஞ்சள் :
* உணவைச் சமைக்கும் இடமென்பது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறம் அதற்கு ஏற்றதாக இருக்கும்.
* மஞ்சள் அடிப்படையிலேயே பிரகாசமான நிறம். எலுமிச்சை, வாழைப்பழம், சூரியகாந்தி மலர்கள், சூரியன் என மஞ்சள் நிறத்தில் இருப்பவை புத்துணர்ச்சியையும் பிரகாசத்தையும் குறிப்பதாக இருக்கின்றன. அதனால், மஞ்சள் நிறத்தைச் சமையலறைக்கு தேர்வு செய்வது சரியானதாக இருக்கும்.
வரவேற்பறைக்கு வெள்ளை :
* வீட்டில் வரவேற்பறையே அதிகமாகப் பயன்படுத்தும் இடமாக இருக்கிறது. இந்த வரவேற்பறைக்குப் பொருத்தமானதாக உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் பரிந்துரைப்பது வெள்ளை நிறம்.
* வெள்ளைச் சுவர்கள் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் தன்மையுடையதால் அது அறையைப் பெரியதாகக் காட்டும். வெள்ளை எப்போதும் சுத்தத்தையும் சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் நிறமாக இருக்கிறது.
* வெள்ளை நிறம் உங்களுடைய வரவேற்பறையைப் பிரகாசமானதாக மாற்றும். அடர் வெள்ளை நிறம் அறைக்குப் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்கும். பிரகாசமான வெள்ளை நிறம் அறைக்கு சமகால தோற்றத்தைக் கொடுக்கும்.
* உங்களுடைய ரசனைக்குப் பொருந்தும் வெள்ளை நிறத்தை வரவேற்பறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், வெள்ளை நிறத்துடன் பிற வண்ணங்களையும் இணைத்து வரவேற்பறையில் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை