வீடுகட்டும் போது - உட்புற வடிவமைப்பு மற்றும் வெளிப்புற வடிவமைப்பு பற்றிய தகவல்கள்
உட்புற வடிவமைப்பு
* அன்றாட பணிகள் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது. ஆனால், பல நேரங்களில் அத்தகைய சூழ்நிலை இருப்பதில்லை. வீட்டின் உள் அலங்கார அமைப்புகள் மூலம் வீடுகளில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதாவது, அறைகளின் உள் அமைப்பை கலையும், அழகும் கொண்டதுபோல மாற்றிக்கொண்டால் மனதில் நிம்மதி தாமாக ஏற்படும் என்பது அவர்களது கருத்தாகும்..
* இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் இண்டீரியர் பட்ஜெட் பற்றி வல்லுனர்களின் கருத்துக்கள் வெவ்வேறு விதங்களில் இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் பல நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் எஸ்டிமேஷன் தருகிறார்கள். லேபர் கான்ட்ராக்ட் முறையில் செய்து தருவதற்கு தனி நபர்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
கார்ப்பெட் ஏரியா
* பொதுவாக, வீடுகளின் கார்ப்பெட் ஏரியா அளவுடன் ரூ.1000 என்ற மதிப்பை பெருக்கி வரும் விடை, இண்டீரியர் அமைப்புக்கான தோராயமான செலவாக அமையும். உதாரணமாக, வீட்டின் கார்ப்பெட் ஏரியா 650 சதுர அடியாக இருந்தால், ரூ.6,50,000 என்பதை தோராயமான செலவாக கருதலாம். இதர காரணங்களால் அந்த தொகை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நவீன மூலப்பொருட்கள்
* வீட்டின் வெளிப்புற அமைப்பை விடவும் உட்புற அறைகளின் அமைப்புக்கும், அழகுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீடு கட்டும்போது ஏற்பட்ட எதிர்பாராத கட்டுமான குறைகளை இன்டீரியர் பணிகள் மூலம் சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போதுள்ள நவீன தொழில் நுட்ப வசதிகளால் அழகும், வசதிகளும் கொண்டதாக வீட்டின் அமைப்பையே மாற்றிவிடலாம். அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலப்பொருட்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
பட்ஜெட்டுக்கு ஏற்றது
* இண்டீரியர் டெக்ரேஷன் என்ற வீடுகளுக்கான உள் அலங்காரமானது அதிக பட்ஜெட் கொண்ட வீடுகளுக்கானது என்ற கருத்து பலருக்கும் இருப்பதை நிபுணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக குறைவான பட்ஜெட் கொண்ட வீடாக இருந்தாலும் அதற்கேற்ற அலங்கார அமைப்புகளை செய்து அட்டகாசமாக வீட்டை மாற்ற முடியும்.
* தலைவாசலில் செயற்கையான மாவிலை தோரணம் போன்று பல்வேறு ஹாங்கிங்ஸ் தொங்கவிடப்படுவது எளிமையான அழகு தரும்.
* ஹால்களில் பர்னிச்சர் செட்டிங்ஸ் மிக முக்கியமானது. அதனால், ஹாலில் உள்ள ஷோ-கேஸ்களில் பல்வேறு பொருட்களை விதவிதமாக அடுக்கி வைப்பதை காட்டிலும், ஹாலின் இதர அமைப்புகளுக்கு பொருத்தமாக உள்ள பொருட்களை மட்டும் கச்சிதமாக அடுக்கி வைப்பதே நல்ல அழகை தரும்.
* குட்டிபசங்களின் டிராபி மற்றும் ஷீல்டுகள் போன்றவற்றை ஷோ-கேஸ் உள்ளே அடுக்கி வைக்காமல், சற்று உயரத்தில் அவற்றின் மேற்புறமாக வைத்தால், அது ஒரு அழகாக தோன்றும்.
* சிறிய அளவிலான மீன் தொட்டியை ஹாலில் வைத்தால், ஒட்டு மொத்த சூழலே மாறிவிடும். நுழைவாசலுக்கு எதிராக உள்ள சுவரில் பாதி அளவுக்கு இயற்கை காட்சிகள் கொண்ட வால்பேப்பர்கள் ஒட்டியும் அழகு படுத்தலாம்.
* அறைகள் அல்லது ஹாலின் கார்னர் பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட டெரகோட்டா வகை பானைகளை வைத்து அதன் நிறத்துக்கேற்ப செயற்கை பூங்கொத்துகளை சொருகி வைத்தால் அருமையாக இருக்கும்.
* அறைகளின் நிறத்துக்கு தக்க ஸ்கிரீன்கள், தரை விரிப்புகள் போன்றவை அவற்றின் அழகை எடுப்பாக காட்டும்.
* அறை சிறிய அளவுள்ளதாக இருந்தால் மினி பிரிண்ட்ஸ் எனப்படும் டிசைன் பேப்பர்களை சுவர்களில் ஒட்டி வைத்து அழகு படுத்தலாம். மேலும், அந்த அமைப்புக்கு தகுந்த அளவுகளில் அழகான படங்களையும் மாட்டி வைக்கலாம்.
* கிரானைட் மற்றும் மார்பிள் டிசைன்கள் கொண்ட பி.வி.சி தரை விரிப்புகள் அதிக செலவில்லாமல் வீட்டை அழகாக காட்டும் தன்மை கொண்டவையாக இருப்பதால் அனைத்து வீடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
* சமையலறையில் மனதிற்கு இனிய படங்களை மாட்டி வைக்கலாம். தண்ணீர் புழங்கும் இடம் என்பதால் ஆண்டி ஸ்கிட் டைல்ஸ் பதிப்பதோடு, சமையல் மேடையை பாலிஷ் செய்த கடப்பா கல் கொண்டு அமைக்கலாம்.
* ஒரு வீட்டின் இன்டீரியரில் முக்கிய பங்கு வகிப்பது சுவர் அலங்காரம். பொதுவாக வரவேற்பறையில் உள்ள சுவர்களுக்கு அடர்த்தியான நிறம் கொண்ட பெயிண்டினை தேர்வு செய்து அடிக்கக் கூடாது. ஏனென்றால், அடர்த்தியான நிறம் அந்த அறையை இருட்டாகவும், சிறியதாகவும் காண்பிக்கும். அதனால் வெளிர் நிற பெயிண்ட்டை தேர்வு செய்வது நல்லது. அப்போதுதான் சின்ன அறையாக இருந்தாலும், அதை அழகாகவும், பளிச்சென்று பெரியதாக காண்பிக்கும். அது போன்று வரவேற்பறை என்றால், டிவி, சோஃபா செட், டீபாய் மிகவும் அவசியம். படுக்கை அறை என்றால் வார்ட்ரோப் மற்றும் டிரஸ்ஸிங் டேபிள். கிச்சனில் மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்கள் வீட்டின் அடிப்படை. அதனால் முதலில் இதற்கான இடத்தை தேர்வு செய்து ஒதுக்கிவிட்டு. மீதமுள்ள இடத்தில் அலங்காரம் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.
* தற்போது, பல வடிவங்களில் சின்னதாக சுவற்றில் செல்ப் வைப்பது பேஷன். அதில் கலைப் பொருட்கள் அல்லது நமது புகைப்படங்களை அழகாக அடுக்கலாம்.
* எல் வடிவில் உள்ள கார்னர் இருந்தால், அங்கே வார்ட்ரோபை வைக்கலாம். இதனால் நிறைய பொருட்களை உள்ளே வைக்க இடம் கிடைக்கும். அதே சமயம் நாம் அதிகமான பொருட்களை வைத்து அடைக்கவும் வேண்டாம்.
* வீட்டு பால்கனியில் சிறிய அளவில் செடிகளை வைத்து அழகு படுத்தலாம். சிலருக்கு பால்கனி இல்லாதபோது, அவர்கள் வரவேற்பறையிலேயே சிறிய அளவிலான குரோட்டன்ஸ் போன்ற செடிகளை வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும்.
வெளிப்புற வடிவமைப்பு
* பசுமை வீட்டில் பசுமையான புல்வெளிகள் இருக்க வேண்டும். பசுமையான புல்வெளிகள் வீட்டை கவரும் முதன்மையான அம்சமாக இருக்கும். வீட்டின் முன் பகுதியில் குளம் இருந்தால், எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேப்போல, வீட்டின் கூரைகள் மற்றும் வெளிப்புற சுவர்கள் ஆகியவைகளுக்கும் அவ்வப்போது பெயிண்ட் அடித்து புதிதாக வைத்திருக்கவும். மேலும் வீட்டின் முன்பகுதி அல்லது தோட்டத்தில் சரியான மேசை நாற்காலிகளை வைத்து உருவாக்கப்படும் காலை உணவு அல்லது மதிய விருந்து ஏற்பாடுகள், வீட்டிற்கு குடும்பப் பாங்கான தோற்றத்தை கொடுக்கும்.
* தேக்கு, கண்ணாடி மற்றும் கரும்பு போன்றவற்றையும் கொண்டு வீட்டை அழகுபடுத்தப் பயன்படுத்தலாம். பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் செடிகள் மற்றும் அழகாக பூத்திருக்கும் பூக்கள், வீட்டை ஆடம்பரமாகவும், அழகாகவும் வெளிப்படுத்தும்.
* வீட்டின் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டே வீட்டின் மதிப்பு இருக்கும். வீட்டை கஷ்டப்பட்டு அழகாகவும், நாகரீகமாகவும் கட்டி விட்டு, அதனை பாதுகாப்பில்லாமல் விட்டு விடுவதில் அர்த்தம் இருக்காது. சர்க்யூட் கேமராக்கள் அல்லது அலாரம் என ஏதாவது ஒன்றை வைத்து பாதுகாப்பினை உறுதி செய்வதும் அவசியம். அதே நேரத்தில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதற்காக சர்க்யூட் மற்றும் மின்சார இணைப்புகளை கவனிப்பதும், சுவிட்ச் போர்டுகள் மற்றும் பிற இணைப்புகள் ஆகியவற்றை கவனிப்பது மிகவும் அவசியமானதாகும்.
கருத்துகள் இல்லை