வீடுகட்டும் போது - வீடு கட்ட தேவையான பொருட்கள் என்ன? மற்றும் அதன் விரிவான விவரங்கள்
* நாம் கனவு இல்லத்தை கட்டும்போது அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கட்டுமான பொருட்களின் தரத்தை நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வீடு கட்டும் இடத்தின் மண்ணின் தரத்தை பரிசோதித்து அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் போதே தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
* கட்டுமான பொருட்கள் தேவைக்குகேற்ப இருப்பு இருக்க வேண்டும். எந்த கட்டுமான பொருளை வாங்கினாலும் அது தரமான பொருளா என்பதை அறிந்து வாங்கவேண்டும்.
* ஒருவேளை கட்டுமான பொருட்களை பற்றிய தரம், வலிமை, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஏற்கனவே பயன்படுத்தியவர்களிடமும், வல்லுநர்களிடமும் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.
* நாம் வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், பெயிண்ட், கம்பிகள் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான பொருட்களையும் பிறரிடம் ஆலோசித்து நன்கு கண்கானித்தால் மட்டும் வீட்டின் தரம் உயர்வாக இருக்கும்.
வீடு கட்ட தேவையான அத்தியாவசியப் பொருட்கள்:
* தண்ணீர்
* சிமெண்ட்
* மணல்
* இரும்புக் கம்பிகள்
* செங்கல்
* ஜல்லி
* பெயிண்ட்
தண்ணீர்:
* தண்ணீரின் தரம் மிக முக்கியமானதாகும். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும். அதனால் குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்பது அர்த்தமில்லை. அதிக உப்பு இருக்கும் நீரில் வீடு கட்டக்கூடாது என்பதே இதன் அர்த்தமாகும்.
* மேலும், தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரில் சிறிதளவுகூட உப்பு இருக்க வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
* இப்போதெல்லாம் அதிக வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சில மோட்டார்கள் பழுதாகி விடுகின்றன. எனவே வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி பழுதாகிவிடுவதை தடுக்கலாம்.
* வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது மிகவும் சிறந்த வழியாகும். எனவே, அதிக உப்பு இல்லாத தண்ணீரை உபயோகித்தால், வீட்டின் தரம் உயர்வானதாக இருக்கும்.
சிமெண்ட்:
* கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தும் சிமெண்டில் 10–க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக வீடுகளும், அடுக்குமாடிக்குடியிருப்புகளும் கட்டுவதற்கு, 'ஆர்டினரி போர்ட்லேண்ட்' சிமெண்டு வகைதான் நடைமுறையில் உள்ளது.
* சிமெண்டு வகைகளின் தரக்குறியீட்டை வைத்தே, அதன் உறுதித்தன்மை எவ்வளவு, அதன் இறுகக்கூடிய தன்மை எத்தகையது மற்றும் அதன் நீடித்து உழைக்கும் தன்மை எந்த அளவுக்கு உள்ளது போன்ற விஷயங்கள் கணக்கிடப்படுகின்றன.
* அந்த வகையில், 33 கிரேடு, 43 கிரேடு மற்றும் 53 வகை கிரேடு என மூன்று வகை சிமெண்ட் வகைகள் வீடுகள் கட்டப் பயன்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய அமைப்பு மூலமாக எல்லா சிமெண்ட் வகைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
* 33 கிரேடு போர்ட்லேன்ட் சிமெண்டு என்பது சின்னச்சின்னப் பணிகளுக்கும், சாதாரணமான பூச்சு வேலைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. அவை சற்று குறைவாகவே புழக்கத்தில் உள்ளது. அதன் விலையும் மற்றவைகளை விட குறைவு.
* 43 கிரேடு கொண்ட சிமெண்டானது அனைத்து வகையான வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடியது. நமது ஊரில் பெரும்பாலும் அந்த வகையான சிமெண்டுதான் பயன்பாட்டில் உள்ளது.
* இந்த வகை சிமெண்டு மூலம் வீடுகள், கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டிற்கான அடித்தளங்கள், வெளிப்பூச்சுக்கள், உள்பூச்சுக்கள், டைல்ஸ், மார்பிள், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிகளைச் செய்வது தற்போது நடைமுறையில் உள்ளது.
* 53 கிரேடு சிமெண்டு என்பது நல்ல கட்டமைக்கும் திறம் பெற்றது. இந்த வகை சிமெண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
* சிமெண்ட்டை தேர்வு செய்யும் போது, பி.ஐ.எஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட்டை தேர்வு செய்ய வேண்டும்.
* தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமெண்டு மூட்டையின் மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா?, மூட்டையின் வாய்ப்பகுதி கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியில் தையல் பிரிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சிமெண்ட் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
* சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் இருக்கும் சிமெண்டை வாங்குவது நல்லதாகும்.
* சிமெண்டு மூட்டையினுள் கைவிட்டு சிமெண்ட்டை தொடும்போது, குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கையில் சிமெண்டை அள்ளி ஒரு வாளி நீருக்குள் போடும்போது, சிமெண்டு சில நிமிடங்கள் மிதந்த பின்பே நீரில் கரைய வேண்டும். போட்டவுடன் நீரில் கரையும் சிமெண்ட் வகைகள் அவ்வளவு நல்லதல்ல.
* சிமெண்டைக் கொஞ்சம் எடுத்து அதை பேஸ்ட் போலக்குழைத்து ஓரு அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் அமைக்கவேண்டும். அதை அப்படியே மெல்ல நீரில் அமிழ்த்தும் போது, அந்த வடிவம் அவ்வளவு எளிதில் கரையக்கூடாது. ஒரு நாள் கழித்தே அது இறுகி கடினமானதாக மாறவேண்டும்.
* சிமெண்டை கைகளில் எடுத்து, விரலில் வைத்து தேய்க்கும்போது கல்துகள்களை தேய்ப்பதுபோல இருக்கக் கூடாது.
* சிமெண்டை வாங்கியபின்பு காற்றோட்டம் அதிகமாக இல்லாத இடத்தில் அதை அடுக்கி வைத்து பத்திரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில், சிமெண்டு மூட்டைகளை பாலிதீன் உறைகள் போட்டு மூடி வைக்கப்பட வேண்டும்
* தரமான சிமெண்ட்டால்தான் கட்டடத்தை மிகவும் உறுதியானதாக மாற்ற முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைக் கொண்டு ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது தரமான சிமெண்ட் ஆகும்.
* அதுமட்டுமின்றி, சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
மணல்:
* சிமெண்ட் எந்த அளவிற்கு தரமாக இருக்கிறதோ, அதுபோல அதனுடன் சேர்க்கும் மணலும் தரமானதாக இருக்க வேண்டும். எனவே, மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும். அதுப்போன்ற மணல்களை தவிர்த்துவிட வேண்டும்.
* இருப்பினும், மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* இப்போது, கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. உப்புக் கரித்தால் அது கடல் மணல் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி விரைவாக உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலில் வீடு கட்டுவதை தவிர்த்து விடுங்கள்.
* மேலும், மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமெண்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
* சிமெண்டை பொறுத்தவரையில் உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் சிமெண்டின் இறுக்கம் குறைந்துவிடும்.
இரும்புக் கம்பிகள்:
* வீடு கட்டுவதற்கு முதலில் நாம் செய்வது பூமி பூஜை ஆகும். பின்பு அஸ்திவாரம் போடுவதாகும். அந்த அஸ்திவாரத்திற்கு மிக முக்கியமானது இரும்புக் கம்பிகள் ஆகும். ஏனெனில், கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
* ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கும். எனவே, இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* மேலும், இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விட நேரிடும். எனவே, தரமான கம்பிகளை வாங்குவதில் கவனம் கொள்ள வேண்டும்.
செங்கல்:
* வீடு கட்டுவதில் மிகவும் அவசியமாக தேவைப்படும் பொருள் செங்கல். ஏனெனில் வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கல்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கல்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளுமே பயன்படுத்துவதற்கு தரமானதாகும்.
* மேலும், செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று பொருள்.
* இப்போது 'இன்டர்லாக் செங்கல்கள்' என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. அதுமட்டுமின்றி இது நம் வேலையைச் சுலபமாக்கும்.
ஜல்லி:
* கான்கிரீட்டுக்கு ஜல்லி மிகவும் அத்தியாவசியப் பொருளாகும். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான ஜல்லியை பயன்படுத்தலாம்.
* அடித்தள வேலைகளுக்கு 1.5 (ஒன்றரை) ஜல்லிகளையும் இதர கான்கிரீட் வேலைகளுக்கு 3/4 (முக்கால்) ஜல்லிகளையும் பயன்படுத்த வேண்டும்.
* அதுமட்டுமின்றி, தட்டையாகவும், நீளமாகவும் உள்ள ஜல்லியை விட, உருண்டையாகவும், கூம்பு வடிவிலும் இருக்கும் ஜல்லிகள் குறைந்த அளவு தண்ணீர் பயன்பாட்டில், கான்கிரீட்டுக்கு உகந்த தன்மையை அளிக்கின்றன. பொதுவாக, கான்கிரீட்டில் தண்ணீரின் அளவு குறையும்போது அதன் வலிமை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. அதனால், உருண்டையாகவும், சரியான கோணங்கள் கொண்டதாகவும் உள்ள ஜல்லியின் பயன்பாடு பாதுகாப்பானது.
* கான்கிரீட் அமைப்புக்கேற்ப சரியான விகிதாச்சாரத்தில் ஜல்லி சேர்க்கப்படுவதோடு, அவற்றின் அளவிலும் கவனம் வேண்டும். மேலும், செடி, புல் போன்றவை ஜல்லியில் கலந்து இருந்தால் அவற்றையும், களிமண், மண், சேறு, தூசிகள் ஆகியவை ஒட்டியிருந்தாலும் ஜல்லியை தண்ணீர் கொண்டு கழுவுவது அவசியம். கான்கிரீட் போடும் சமயங்களில் ஜல்லியை கழுவும் பட்சத்தில், அதன் ஈரப்பதம் காரணமாக கட்டிட உறுதி குறைய வாய்ப்புள்ளது. அதனால், கான்கிரீட் போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதை செய்து விடுவது நல்லது.
* தரமான கான்கிரீட் மற்றும் சுவரின் மேற்பூச்சு கலவை ஆகியவற்றுக்கு சிமெண்டு மற்றும் இதர மூலப்பொருட்களின் தரம் ஆகியவற்றோடு மணலின் பங்கும் முக்கியமான ஒன்றாகும். கான்கிரீட் மற்றும் பூச்சுக்கலவையில் உள்ள நுண் ஜல்லியான மணலின் அளவு 4.75 மில்லி மீட்டர் அளவிற்கு கீழ் இருக்கவேண்டும் என்று இந்திய தர நிர்ணயக்கழகம் விளக்கியுள்ளது.
* மேலும், ஜல்லியின் அளவு சிறிதாக இருக்கும்பட்சத்தில் மொத்தமாக அதன் மேற்பரப்பளவு அதிகமாகும். அதன் காரணமாக, கான்கிரீட் கலவைக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். ஜல்லியின் அளவு பெரிதாக இருந்தால் மேற்பரப்பளவு குறைந்து, தண்ணீர் பயன்பாடு குறையும்.
பெயிண்ட்:
* பெரும்பாலான நேரத்தை நாம் வீட்டில் செலவழிப்பதால், நம் வீட்டின் உபயோகிக்கும் வண்ணங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்மை பயக்கும்.
* நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் வண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின்னர் அறைகளுக்கான டிசைன்களை பற்றி முடிவெடுக்கிறோம். இது தவறான அணுகுமுறை. வண்ணத்திற்கிற்கு ஏற்ற மாதிரி திரைச்சீலை, உள் அலங்காரங்கள் அமைப்பது கடினம்.
* அதற்கு பதிலாக எல்லாவற்றையும் அமைத்த பிறகு வண்ணமடிப்பது சிறந்தது. திரைச்சீலைகளுக்கு ஏற்றது போல் வண்ணங்களை தேர்ந்தெடுத்தல் மேலும் அழகூட்டும்.
* அறைகளின் புகைப்படங்கள் இருந்தால் போதும். விரும்பிய வண்ணங்கள் மாதிரிகளை, கணினி வாயிலாக பொருத்தி பார்த்து, எந்த வண்ணம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்யலாம். பழைய வண்ணத்தையே, மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான பெயிண்ட்தான் தேவைப்படும். புதிய நிறத்திற்கு மாறும் போது, அதிகளவில் இழுக்கும்.
* இதில் கூடுதல் வசதியாக, சில நிறுவனங்கள் பெயிண்ட் அடிக்கும் பணியை முடிப்பதற்கும், ஆட்களை அனுப்பவும் முன்வந்து உள்ளன. இது போன்ற சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் மக்கள், ஒவ்வொரு நிலையிலும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
* குறிப்பாக, பெயிண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரைகளை, அப்படியே ஏற்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை புரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். கூடுதல் வசதிகள் கிடைக்கிறது என்பதற்காக, சம்பந்தப்பட்ட பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரைகளில் தேவை இல்லை என்று தெரிவதை தைரியமாக தவிர்க்கலாம்.
வண்ணங்களை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை:
* வெளிப்புற சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சு எனப்படும், வெள்ளை அடிக்கும் முறை மறைந்து, அதற்கு பதிலாக, டிஸ்டம்பர் வகைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
* வீடுகளுக்கு வண்ணம் அடிக்கும் பணி, ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் செய்ய வேண்டிய பராமரிப்பு பணியாக இருந்து வருகிறது. வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் வண்ணங்கள் பூசப்படும் போது, வீட்டின் உள் அறைகள் விசாலமான தோற்றம் தருவதாக அமையும்.
* வீட்டின் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணியை துவக்கும் முன், சுவரில் படிந்துள்ள அழுக்கு, கறைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்துவது அவசியம்.
* விரிசல்களை சரி செய்ய, சிமென்ட் பூசி இரு நாட்களுக்கு பின், வண்ணம் அடிக்க வேண்டும்.
* எப்போது துவங்கி எப்போது முடிக்கப் போகிறோம் என்பதை, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வீடு கட்டும்போது மேலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
* அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
* பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
* போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது சிறந்தது.
* கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
* கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும்.
* கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
* மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
* அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கான சிறந்த வழி, முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
* சமீபத்திய தொழில்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
* செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
* மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை அதிகரிக்க கூடியவை. எனவே, எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மரம் போன்ற தோற்றத்தினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
* பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
* ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட எம்-சேண்டை (M-Sand) பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம்.
* ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
* எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொறியாளர் மூலமாக கார் பென்டருக்கு (Carpenter) உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை கார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு (Slab) போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
* முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். அவ்வாறு பழைய பொருட்களை பயன்படுத்தும்போது, கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
* இன்றைய காலக்கட்டத்தில் கட்டுமானப் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
* கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
* செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இந்த முதலீட்டை ஒருமுறை செய்தால், இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை பெரிதளவு குறைக்கலாம்.
* தரமற்ற பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் செலவை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
* வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவனமாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
* சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
* லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ, சிட் அவுட், சன்ஷேடு, பொருட்கள் வைக்க சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை