மல்யுத்தம், மற்போர், குஸ்தி (WRESTLING) என்று அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டு குறைந்தது 4000 ஆண்டுகளாக விளையாடப்படுகிறது. இதற்கான பழைய சான்றுகள் எகிப்தில் பேனி ஹாசன் என்னும் இடத்தில் சுவரில் எழுதப்பட்ட பழைய சான்றுகளில் உள்ளது.
அதற்குப் பின்னர் கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள், பானைகள், சிலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2500 ஆண்டு பழமை உடையவை.
நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது.
அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது. மல்யுத்தம் என்பது இரண்டு நபர்கள் ஆயுதங்கள் இன்றி ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்பு கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவமாகும்.
இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. 'மல்' என்பதற்கு வலிமை, மற்றொழில் எனப் பொருள் உண்டு. இம்மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது.
மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.
கருத்துகள் இல்லை