சமையலறையின் அமைப்பு:
ஒரு இல்லத்தின் மிக முக்கியமான அறை சமையல் அறைதான். நல்ல காற்றோட்டத்துடனும், வெளிச்சத்துடனும் அமையப்பெற்று இருப்பது அவசியம்.
சில இல்லங்களில் சமையல் கட்டுகளில் மேடை முழுக்க பொருட்களை நிறைத்து வைத்திருப்பார்கள்.
ஸ்டவ் தவிர மிக அத்தியாவசிய பொருட்கள் ஒன்றிரண்டு இருந்தால் தான் பார்க்க அழகாகவும், சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும்.
மிக்ஸி, எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை உபயோகித்து விட்டு, அப்புறப்படுத்தும் வசதி இருந்தால் எடுத்து உள்ளே வைத்து விட்டால் அந்த இடம் இன்னும் பளிச் என்றாகிவிடும்.
இரண்டடி அகலத்தில் நான்கு அடுக்குகள் கொண்ட மரத்தாலான செல்பை செய்து சமையல் கட்டில் ஒரு ஓரமாக வைத்து இருந்தால் ஒவ்வொரு அடுக்கிலும் எலெக்ட்ரிக் குக்கர், டேபிள்டாப் கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன், மிக்ஸி, கிரில்ட் அவன், டோஸ்டர் போன்ற மின்சார உபகரணங்களை வைத்துக்கொண்டால் இடம் அடைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது. மிகவும் வசதியாக இருக்கும்.
இரண்டு வேளையும் அடுப்புமேடையை (சிங்க் உட்பட) நன்றாக துடையுங்கள். தினம் ஒரு முறை தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவைப்பது நல்லது. தினந்தோறும் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.
கைப்பிடி துணி உபயோகப்படுத்தும் முறை:
குளியலறையில் ஆடை, துண்டு போடுவதற்கு ஹேங்கர் இருப்பது போல் சமையலறையிலும் ஒரு கொக்கியை பொருத்துங்கள்.
அடுப்பு துடைக்க, கை துடைக்க தனித்தனி துணிகளை உபயோகியுங்கள். அவற்றை அவ்வப்போது அலசி உலர்த்துங்கள்.
முடிந்தவரை கழுவிய பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள். இரும்பு வாணலி, தோசைக்கல், ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும். எக்காரணம் கொண்டும் விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம்.
சோம்பல் படாமல், மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள்.
பூச்சிகொல்லி பயன்படுத்தும் முறை:
எறும்பு பவுடர், கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க மருந்து தெளித்தால் அந்த இடத்தின் மீது பேப்பரை போட்டு வையுங்கள்.
இப்படி செய்வதால், மருந்துகளின் நெடி சமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை.
சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
பாட்டில்களை தேர்ந்தெடுத்தல்:
நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில், பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்த பாட்டில், தேயிலை, காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு, ஒரே மாதிரி அளவுள்ள பாட்டில்களைக் கொண்டு மளிகைப் பொருட்களை நிரப்புங்கள்.
பருப்பு, உப்பு, சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுக்காமல் இருந்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம். மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுவி உலரவைத்து எடுத்தல் அவசியம்.
நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும். ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்கள் சுத்தமாக இருக்கும்.
சிங்க்:
கிச்சன் சிங்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.
எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் அவ்வப்போது கழுவி வைப்பதே நல்லது.
கருத்துகள் இல்லை