வளரி வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு பயன்படுத்தும் ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும் கூட செய்வார்கள்.
பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு.
இவை பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும் அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி எறியும் வேகத்தைப் பொறுத்தது.
உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவரின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களை தாக்குவதற்காகவே எறியப்படும். வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும்.
பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகங்கை, தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.
வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்தியலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை