* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : சூலக்கல்
* முகவரி : சூலக்கல், கோயம்புத்தூர்.
* தாலுகா : கிணத்துக்கடவு
வரலாறு :
புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான சூலக்கல் மாரியம்மன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலக்கல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பசுக்களை சூலக்கல் பகுதியில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு சில நாட்களுக்கு பிறகு மேய்ச்சலை முடித்து வீடு திரும்பும் போது பசுக்களின் பால் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.
இதை கண்டுபிடிப்பதற்காக விவசாயிகள் மேய்ச்சலின்போது பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பால் சுரந்து கொண்டிருந்தது.
இதைக்கண்ட விவசாயிகள் ஆச்சரியமடைந்து அந்த பசுக்களை விரட்ட மாடுகள் மிரண்டு போய் ஓடியது. அப்போது ஒரு மாட்டின் கால், பால் சுரந்த இடத்தில் மாட்டிக்கொண்டது. மாடு காலை உருவிக்கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு சிறிது சேதமடைந்தது. சுயம்பு வடிவ கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக்கண்ட விவசாயிகள் இந்த பகுதியை சூலக்கல் என அழைத்தனர்.
அந்த பசுவின் சொந்தக்காரர் கனவில் தோன்றிய அம்பிகை, சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவை சுற்றி கோவில் கட்டும்படியும் அருளினார். அம்பிகையின் கட்டளைப்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டது.
தல பெருமை :
கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில் சூலக்கல் மாரியம்மன் கோவிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது.
சூலக்கல் மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அருள்புரிவதால் 'வடக்கு வாயிற் செல்வி' என கூறப்படுகிறது. இங்கு அபிஷேகம், ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார்.
சுமார் 400 ஆண்டு பழமையான கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும் கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள்.
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தியில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.
பிரார்த்தனை :
குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வழிபட்டு இங்குள்ள மாவிலிங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த அம்மனை மனமுருகி தரிசித்து வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்தால் கண் நோய்கள் விரைவில் குணமடையும்.
இருப்பிடம் :
கோவை - பொள்ளாச்சி சாலையில் கோயில் பாளையத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் இந்த கோவில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை