* மாவட்டம் : திண்டுக்கல்
* இடம் : திண்டுக்கல்
* முகவரி : பழனி ரோடு, புதிய அக்ரகாரம்,திண்டுக்கல்
* தாலுகா : திண்டுக்கல்
வரலாறு :
அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவிலின் கீழே குளமும், மேலே மலைக்கோட்டையும் அமைந்துள்ளது.
தல வரலாறு :
இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை.
மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், அப்பகுதியில் இருந்த மலைக்கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார்.
தலபெருமை :
இங்கு ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இங்கு கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டுகின்றனர்.
இளநீரின் மேற்பகுதியில் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியைக் குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்துவிடுவர். அர்ச்சகர் அதை ஆஞ்சநேயரின் வாலில் கட்டிவிடுவார்.
ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம். வாலைக் கொண்டு சீதைக்கு துன்பம் செய்தவர்களின் ஊரையே அழித்தது போல, நமக்கு தொல்லை தரும் கிரக தோஷங்களையும் எரித்து விடுவார் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடைமாலை அணிவித்து, தயிர்சாதம் படைத்து வழிபடுகிறார்கள். சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியன்று சன்னதி முன் மண்டபம் முழுதும் பூக்கள், பழம் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்துவிடுவர்.
தை, அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடக்கும்.
பிரார்த்தனை :
துவங்கும் செயல்களில் தடையின்றி வெற்றி கிடைக்க, குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் நீங்க, திருமணதடை விலக வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை, வடைமாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
போக்குவரத்து :
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் 2 கி.மீ. தூரத்திலுள்ள யானைத்தெப்பம் பேருந்து நிலையத்தில் இறங்கி, கோயிலுக்கு நடந்து செல்லலாம். மலைக்கோட்டையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.
கருத்துகள் இல்லை