* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : திருப்பூர்
* முகவரி : திருப்பூர், திருப்பூர்
* தாலுகா : திருப்பூர்
வரலாறு :
கோயிலின் முன்பகுதியில் காஞ்சிமா நதி (நொய்யல்) ஒடிக்கொண்டிருக்கிறது. 1945 முதல் 1970 வரை ஆற்றில் சுத்தமான நீர் ஒடியதாகவும், அந்த நீரை எடுத்து அம்மனுக்கு, பூஜை நடைபெற்றதாகவும் ஐதீகம். கோயில் கட்டிய காலத்தில் இருந்து நொய்யல் நதிக்கரையில் 16 அடி பாம்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பாம்பு வருடத்தில் ஒருமுறை, அம்மனுக்கு குண்டம் திருவிழா நடக்கும் போது, நடுநிசியில் குண்டம் வளர்த்திய பிறகு (தீ பற்ற வைத்த பின்) குண்டத்தின் மேல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இன்று வரை இது தொடர்ச்சியாக நடப்பதாக, இப்பகுதியினர் நம்புகின்றனர்.
நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவர், சிறப்பு அலங்காரமின்றி சாதாரண தோற்றத்துடன் (இரவு காவலர் போல) சிங்க வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகளில் சுற்றி வருகிறாள். அவள் வந்த சென்ற பின், தேர் திருவிழா கமிட்டியினர் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனிடம் உத்தரவு பெற்று வந்து பிறகு தான், கோயிலில் கொடியேற்ற நிகழ்வுகள் துவங்கப்படுகிறது. அம்மன் காவல் தெய்வம் என்பதால், தேர் வீதிகளில் வலம் வந்து, துர்சக்திகளை விரட்டிய பிறகு தான், கொடியேற்றத்துக்கு செல்லாண்டியம்மன் உத்தரவு வழங்குகிறாள். ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கொடிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கடைசி செவ்வாய் குண்டம் திருவிழா நடக்கிறது. சுற்றிலும் மயானம் நடுவே (காளியின் அம்சமாக) அம்மன் விற்றிருப்பதால், சாபம் தீர்ப்பவளாக கருதப்படுகிறாள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று, உணவு அருந்துபவர்கள், தங்கள் முன்னோர், வேண்டாதோரிடம் பெற்ற சாபங்கள், பழிச்சொற்கள் போய் விடும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியன்று கருப்பராயனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு பாதகொறடு (ஆணிச்செருப்பு)அணிந்து குறி சொல்லும் பழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் குண்டம் முடிந்த பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை பேச்சியம்மனுக்கு சினைஆடு அறுக்கும் பழக்கம் உள்ளது. பேச்சியம்மன் முன் 108 படையல் போட்டு, விசேஷ பூஜை ஒன்றை நடத்தி சினை ஆட்டை அறுத்து, அப்படியே சாமிக்கு படைக்கின்றனர். இந்த பூஜையில், இதன் பிறகு நடக்கும் விருந்தில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலனோர், கல்யாணம் ஆன பின் பிள்ளை வரம் கிடைக்காதவர்களாக இருக்கின்றனர்.
அம்மன் சாந்தமான உருவமாக இல்லாமல் எதிரில் மயானம், பின்புறம் மயானம் என மாயனத்தை சுற்றி எட்டு கைகளில் ஆயுதங்களுடன் காளியாக இருக்கிறாள். யாழி (சிதைக்கப்பட்ட சிங்கத்தின் முகம்) அம்மனுக்கு வாகனமாக இங்கு மட்டுமே உள்ளது. 1863ல், ஜூலை மாதம் இக்கோயில் கட்டப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. சிதிலமடைந்த கோயில் 2006ல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை