* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : ஆழ்வார்குறிச்சி
* முகவரி : ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி
* தாலுகா : அம்பாசமுத்திரம்
வரலாறு :
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை. அத்ரி என்னும் மகரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி என்னும் பெயர் வந்துள்ளது. இயற்கை மாறாது இருக்கும் இம்மலைப்பகுதி புலிகள் வாழும் வனப்பகுதி ஆகும்.
அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம், ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
அத்ரி ஓர் மகரிஷி ஆவார். அத்ரி மனைவியின் பெயர் அனுசுயாதேவி. அனுசுயாதேவியிடம் ஒரு முறை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் மாறுவேடம் தரித்து உணவு யாசகம் செய்ய சென்றனர். அனுசுயாதேவி மும்மூர்த்திகளுக்கும் உணவு தர வீட்டின் உள்ளே அழைத்தார். மும்மூர்த்திகளும் கூறிய நிபந்தனையை ஏற்று மும்மூர்த்திகளையும் பாலகர்களாக மாற்றி உணவு ஊட்டினார்.
முப்பெருந்தேவிகளும் தங்கள் கணவன்மார்கள் குழந்தைகளாக உள்ள நிலை அறிந்து அனுசுயாதேவியிடம் முறையிடவே நீர் தெளித்து மூவரையும் ஒவ்வொருவராக தத்தாத்ரேயர் வடிவில் உருவம் பெறச் செய்து கற்புக்கரசியாக விளங்கினார்.
அத்ரி மலையின் சிறப்பு :
கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் இங்கு வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும் அதை காண்பது அவ்வளவு எளிதல்ல என கூறப்படுகிறது.
சிவன் கோயிலிற்கு அருகே பாலை மரம் என்றொரு அரியவகை மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து வைகாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அதிசயிக்கும் வகையில் ஒரு அற்புதமான பன்னீர் மழை பொழிகிறது.
பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் ஏதாவது 2 நாட்கள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒருவகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.
அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றன. அதை பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழைபொழிவது போல காட்சி அளிக்கின்றன.
வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தால் அது பன்னீர் வாசனையில் உள்ளது. ஆனால் அது மிக விரைவில் காய்ந்துவிடுகிறது. மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்கு தெரிவதில்லை.
எப்படி செல்வது?
நெல்லையை அடைந்து அங்கிருந்து அம்பாசமுத்திரம் அடுத்துள்ள, ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 7 கிலோமீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.
எண்ணற்ற ஆச்சர்யங்களும், அற்புதங்களும் நிறைந்து மனதை இயற்கையோடு ஒன்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும் அத்ரி மலை.
கருத்துகள் இல்லை