பொதுவான தகவல்கள் - நிலத்தடி நீர்மட்டம் பரிசோதிப்பது எப்படி?
மழைவளம் குறைந்து போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. ஏற்கனவே உள்ள கிணற்றிலும், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால் புதிய கிணறுகளையும், ஆழ்துளை கிணறுகளையும் அமைக்கின்றனர். நாம் வீடுகட்டும் இடத்தில் நல்ல தண்ணீர் வசதி இருப்பது மிக அவசியமான ஒன்று. அதை மனதில் கொண்டு நாம் வீடு கட்டும் இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் கண்டுபிடிப்பதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி பரிசோதிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
நாம் நீர் மட்டம் உள்ள இடத்தை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஏமாற்றம் இல்லாமல் எளிதாக தண்ணீர் கிடைப்பதோடு அதற்காக செலவிடப்படும் செலவும் குறைவாகும்.
முன்னோர்களின் நீர் மட்டம் அறியும் முறை
நம் முன்னோர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறிய ஒரு சில இயற்கை கருவிகளை பயன்படுத்தினர்.
கரையான் புற்று
* கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும், அதுவும் சுவையான நீர் கிடைக்கும்.
* கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும் என்பது நாம் அறிந்ததே.
* இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும் போது கரையான் புற்று உள்ள இடத்தை தான் தேர்வு செய்கிறார்கள்.
தேங்காய்
* ஒரு தேங்காவை எடுத்து குடுமி மட்டும் உள்ளவாறு உறித்து "எல்" வடிவில் உங்கள் உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* அப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காவை கொண்டு சென்றால் தேங்காயின் குடுமி 90 டிகிரி வானத்தை நோக்கி இருக்கும்.
* இப்படி 90 டிகிரியில் தேங்காயின் குடுமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
Y வடிவ குச்சி மூலம் கண்டறிதல்
* Y வடிவம் போன்ற குச்சியின் முனைகளை தனது இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே லேசாக பிடித்துக் கொண்டு நிலத்தின் மீது மெதுவாக நடக்கும்போது எங்கு நிலத்தடி நீர் தரை மட்டத்திற்கு அருகே உள்ளதோ அங்கு அவர் கையில் பிடித்துள்ள குச்சி வேகமாக சுற்றும்.
அதைக்கொண்டு அந்த இடத்தில் கிணறு வெட்டவோ அல்லது ஆழ்துளை குழாயோ அமைத்துக் கொள்ளலாம்.
நாவல் மரம்
* கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் நாவல் மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும்.
அத்திமரம்
* அத்திமரம் உள்ள இடங்களில் தண்ணீர் இருக்கும். பொதுவாக கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில் தான்.
* அதிக ஆழம் தோண்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடும்.
சப்தம்
* பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.
* கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீர் இருப்பதற்கான அறிகுறியாகும்.
நல்ல நீரூற்று கண்டறியும் முறை
* நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும்.
* அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சேர்த்த அடையாளங்கள் இருக்கும்.
* அந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீர் கிடைக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இயந்திரத்தின் மூலம் நீர் மட்டம் அறியும் முறை
முன்னோர்களின் முறையில் நிலத்தடி நீரோட்டம் பற்றி கண்டறிந்து சொல்பவர்கள் குறைந்து விட்ட நிலையில், அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
நில அதிர்வு தொழில்நுட்பம்
* இந்த முறையில் (SEISMIC TECHNOLOGY) தண்ணீர், கனிம வளங்கள், பாறை அமைப்பு மற்றும் பாறைகளின் தன்மைகள் ஆகியவற்றை கண்டறிய முடியும்.
* இம்முறையில் தண்ணீர் கண்டுபிடிக்க நிலத்தின் மேற்பரப்பில் ஒரு இரும்பு தகட்டின் மீது கனமான சுத்தியினை கொண்டு அடிக்கும் பொழுது நில அதிர்வு ஏற்படுகிறது.
* அந்த அதிர்வின் விளைவால் ஏற்படும் அலைகள் பூமியின் கீழ் 1500 அடி ஆழம் வரை செல்கிறது.
* அப்பொழுது பாறை இடுக்குகளில் தங்கி இருக்கும் தண்ணீரில் பட்டு எதிரொளிக்கிறது.
* இந்த எதிரொளிக்கும் கதிர்களை பூமியின் மேற்பரப்பில் ஒரு கருவியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
* பிறகு இந்த பதிவு செய்யப்பட்ட கதிர் அலைகள் ஒரு மென்பொருள் (software) மூலம் செயல்முறை படுத்தப்படுகிறது.
* இதில் இருந்து 2D மற்றும் 3D தோற்றத்தில் நிலத்தடி நீர் இருக்கும் இடம், ஆழம், அடர்த்தி மற்றும் வெளியேற்றும் திறன் ஆகியவற்றை 80% வரை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
சர்வே செய்யும் விதிமுறைகள்
* சர்வே செய்யும் நிலம் காலி இடமாகவும், விவசாயம் இல்லாமலும் இருந்தால் நல்லது.
* சர்வே செய்யும் நிலம் மிகுந்த ஈரம் இல்லாமலும், மேற்பரப்பில் பாறை இல்லாமலும் இருக்க வேண்டும்.
* சர்வே செய்யும் இடத்தில் அதிர்வுகளை உண்டாக்கும் உயர் மின் அழுத்தக் கம்பிகள், ரயில் வண்டி செல்லும் சப்தம், அதிக வாகன போக்குவரத்து, தொழிற்சாலை இயங்கும் சப்தம், மோட்டார் பம்புசெட் இயங்கும் சப்தம் ஆகியவை இருந்தால் சர்வே செய்யும் தொழில் நுட்பத்தின் துல்லியம் குறையும். எனவே இவற்றை முடிந்த வரை தவிர்த்து விட்டு சர்வே செய்வது நல்லது.
கருத்துகள் இல்லை