பொதுவான தகவல்கள் - வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறை
நீரின் முக்கியத்துவம்
நீர் ஒரு அத்தியாவசியமான பொருள் ஆகும். இந்த நீரின் முக்கியத்துவத்தினை அறிந்து நமது முன்னோர்கள் பின் வரும் சந்ததிகளை கருத்தில் கொண்டு கடினமாக உழைத்து இயற்கை வளமான ஆறுகளில் வரும் நீரினை சேமிக்க தடுப்பனைகளை அமைத்து அதன் மூலமாக ஏரி, குளம், கம்மாய் பகுதிகளை உருவாக்கி நீரை தேக்கி வைத்தனர். இதனால் நீர் வீணாவது தடுக்கப்பட்டது. இவ்வாறு நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி வைத்தால் 20-30 அடி ஆழத்திலேயே தண்ணீர் நமக்கு கிடைக்கும். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது. இன்று மழையும் குறைந்து விட்டது. அதனால் கிடைக்கும் மழை நீரை நாம் சேமிக்க தவறிவிடக் கூடாது.
மழை நீர் சேகரிப்பு
மழை பெய்யும் போது மழை நீரை சேமிக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிகப்படுத்த மழைநீர் சேகரிப்பு மட்டுமே முக்கிய ஆதராமாக இருக்கிறது.
சேகரிக்கப்படும் மழைநீரானது நல்ல தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். இதனால் நீர் ஆதாரம் இல்லாத நேரங்களில் அதாவது மழைப்பொழிவு 200மிமீ-க்கு கீழ் உள்ள இடங்களில் குடிநீர் தேவைக்கு வழிவகை செய்கின்றது. மழை நீரை சேமிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
மழை நீர் சேகரிப்பு முறை
தனி வீடுகளில் மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கட்டாயப்படுத்திவிட்டது. அனைத்து வீடுகளிலும் மழைநீரை சேகரிக்கும் முறை இதனால் கட்டாயமானது.
மழை நீரை சேமிக்கும் முறையில் மூன்று நிலைகள் உள்ளது. அவை
1. மழை பெய்யும் பகுதி
2. நீரை எடுத்து செல்லுதல்
3. நீரை சேமித்தல்
என்ற மூன்று நிலைகள் உள்ளன.
* மழை நீர் சேகரிப்பில் நாம் வீடுகளில் கூரை, ஓடு மற்றும் மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை, குழாய் வழியாக தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சேர்க்கலாம்.
* இந்த மழை நீரை சேமிக்க வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் குறைந்த இடைவெளியில் நீளம், அகலம் முறையே தலா 1 மீட்டரும், ஆழம் 1.5 மீட்டரும் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். இத்தகைய குழியில் கூழாங்கற்கள், உடைந்த செங்கற்கள் போன்ற அடுக்குகளை அமைக்க வேண்டும். சேகரிப்பு பகுதி மணற்பாங்கானப் பகுதியாக இருந்தால் சுமார் 300 சதுர அடி பரப்பிற்கு குழி அமைப்பது சிறந்தது.
* அடுக்கு மாடி வீடுகளுக்கு நீளவட்டத்தில் கசிவு நீர்க் குழிகளை அமைத்து சேமிக்கலாம். தேவைக்கு ஏற்றவாறு 1 - 5 மீட்டர் நீளம், 0.5-1 மீட்டர் அகலம் மற்றும் 0.5-1 மீட்டர் ஆழம் கொண்ட குழிகளை அமைத்து அதன் அடிப்பகுதியில் உடைந்த செங்கற்கள் போட்டு தொட்டியினை கான்க்ரீட் பலகையினைக் கொண்டு மூடி வைக்கலாம். அதிலிருந்து வடிகட்டும் குழிகளை அமைக்க நீளம், அகலம், உயரம் முறையே தலா 2 அடியில் குழி அமைத்து அந்த குழியின் கீழ் மணலும், மேற்பகுதியில் மணலும் கொண்டு நிரப்ப வேண்டும்.
* அந்த அமைப்பிலிருந்து வீடுகளின் தேவைக்கு ஏற்ப ஆழ்துளை கிணறுகளுக்கு கசிவுக் குழிகளை அமைத்து அதற்குள் விடலாம். கட்டிடம், வீடுகள் இவற்றின் பரப்பளவினைப் பொருத்து இந்த முறைகளில் மழை நீரை சேகரிக்கலாம்.
* இது ஒரு செலவு குறைவான திட்டம். இந்த முறை சேகரிப்பானது இந்தியாவின் வறண்ட பிரதேச பகுதிகளில் பல காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு முறையாகும்.
தொட்டிகளில் மழைநீரை சேகரிப்பதற்கான காரணம்
* தொட்டிகளை எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அமைக்கலாம். செங்கல் அல்லது கருங்கல், சுண்ணாம்பு அல்லது சிமெண்ட் , ஜிப்சம், மணல் போன்று இடத்திற்கு ஏற்ப பொருட்களைக் கொண்டு அமைக்கலாம். தொட்டியின் வடிவம் மண் தன்மைக்கு ஏற்ற படி உருளை, செவ்வகம் என இரண்டு வடிவத்தில் அமைக்கப்படுகிறது. மணல் பகுதிகளுக்கு உருளை வடிவத்திலும், பாறைப்பகுதிகளில் செவ்வகவடிவத் தொட்டிகளையும் அமைக்க வேண்டும். உருளை வடிவத் தொட்டிகள் வறண்ட பகுதிக்கு ஏற்றது. இந்த முறையானத் தொட்டிகள் அமைக்க செலவு குறைவாகத்தான் ஆகும்.
* தரைதள சுண்ணாம்புத் தொட்டிகளின் மூலம் சேமிக்கப்படும் மழைநீரானது அடுத்த மழைகாலம் வரும் வரை சேகரிக்கப்படுகிறது. இப்படி சேகரிக்கப்படும் நீர் இயற்கை முறை என்பதால் கோடைகாலத்தில் குளிர்ச்சி தன்மையிலும், குளிர்காலத்தில் இதே நீர் சூடானதாகவும் இருக்கும். இப்படி அமைக்கப்படும் தொட்டிகள் தரைமேல் உள்ள தொட்டிகளுக்கு ஆகும் செலவை விடக் குறைவு.
* இப்படி தரைதளத் தொட்டிகளை முக்கியமாக கட்டிடப் பகுதிகளில் அமைக்கலாம். இவ்வாறு அமைக்கபடும் தொட்டியானது மூன்று முதல் நான்கு அடி தூரத்திலும், சுமாரான மண் தன்மைக் கொண்ட பகுதிகளில் குறைந்தது பத்து அடி தூரத்திலும் அமைக்கலாம். இப்படி தரைதளக் குளாயில் நீரை கொண்டு சேர்க்க அதிக விட்டம் உடைய குறைந்த நான்கு இஞ்ச் குழாய்களைக் கொண்டு கூரையில் இருந்து தொட்டிகளில் இணைக்கலாம்.
சேமிக்கும் நீரின் பயன்கள்
இப்படி சேமிக்கப்படும் மழைநீரினால் நமது அன்றாட நீர் தேவையினை பூர்த்தி செய்யலாம். எவ்வித நச்சுக்கள் இல்லாத தூய்மையான நீர் கிடைப்பதற்கு இந்த மழைநீர் சேகரிப்பு முறை தான் ஒரு சிறந்த வழியாகும். வருடம் முழுவதும் குறிப்பாக கோடை காலத்திலும் நீர் கிடைக்கச் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தின் மேற்புற மண் அரிப்பு தடுக்கப்படுகின்றது.
இப்படி பல விதமான நன்மைகளை உள்ளடக்குய இந்த மழைநீரை நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகள், தூய்மையற்ற நீர் உள்ள பகுதிகள், மழைநீர் ஓடும் தன்மைக் கொண்ட பகுதிகள், அடிக்கடி மழைப்பெய்யும் பகுதிகள், அதிக வறட்சி கொண்ட பகுதிகள் மற்றும் உவர் தன்மைக் கொண்ட நீர் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக சேமிக்கலாம்.
கருத்துகள் இல்லை