பொதுவான தகவல்கள் - வாடகைக்கு வீடு கொடுக்க பதிவு செய்யும் முறை
வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் ஏராளம். இப்படி வாடகைக்கு செல்லும் போது வாடகைதரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதாவது வாடகைதாரருடன் ஏற்படும் பிரச்சனியால் காலக்கெடு முடியாமல் வீட்டை காலி செய்யச் சொல்லுதல், காலக்கெடு முடிந்தும் வீட்டை காலி செய்யாமல் இருப்பது போன்றவையாகௌம்.
இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விதிமுறைகள்
* வீட்டு வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தும் எழுத்துபூர்வமாக மட்டுமே தான் இருக்க வேண்டும். மேலும், எழுத்து பூர்வமான அனைத்து வீட்டு வாடகை ஒப்பந்தங்களும் Rent Authority யிடம் மூன்று மாத காலத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படும் பதிவுகள் அனைத்திற்கும் தனிப்பதிவு எண்கள் வழங்கப்படும். அது மட்டுமின்றி, அரசின் இணைய தளத்தில் அவை பதிவேற்றப்படும்.
* வீட்டு வாடகைதாரரோ அல்லது வீட்டு உரிமையாளரோ வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்ய முடியும்.
* வாடகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே, வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள், வாடகைதாரர், வீட்டு உரிமையாளரை அணுகி, இருவரும் ஒத்துக்கொண்ட சரத்துகளுடன் கூடிய, புதிய ஒப்பந்தத்தை போட வேண்டும்.
* வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கெடு முடியக்கூடிய நேரத்தில், வீட்டின் உரிமையாளர் வீட்டை தன்னிடம் ஒப்படைக்க கோராத பட்சத்தில், புதிய வாடகை ஒப்பந்தம் போடப்படாமலும், வாடகைதாரர் வீட்டை காலி செய்யாமலும் இருக்கும் சூழ்நிலையில், ஏற்கனவே காலாவதியான வாடகை ஒப்பந்தத்தின் சரத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் புதிய வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு தொடர்வதாக அதிகபட்சமாக அடுத்த ஆறு மாதங்கள் வரை கருதப்படும்.
* வாடகை ஒப்பந்தம் காலாவதியாகாத நிலையில், வாடகைதாரர் இறந்து போகும் பட்சத்தில், அவர் இறக்கும் வரை அவருடன் பொதுவாக குடியிருந்த உறவுகள், கீழ்காணும் முன்னுரிமை அடிப்படையில், வாடகை ஒப்பந்தம் காலவதியாகும் வரை அங்கு குடியிருக்க உரிமை உண்டு. a) கணவன் அல்லது மனைவி b) மகன்கள், மகள்கள் மற்றும் விதவை மருமகள்கள் c) பெற்றோர்.
* காலாவதியாகும் வாடகை ஒப்பந்தத்தில் புதிய ஒப்பந்தத்திற்கான வாடகை குறிப்பிடப்பட்டிருந்தால், அது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே எழுத்து பூர்வமாக வாடகைதாரருக்கு தெரியப்படுத்தவேண்டும்.
* புதிய வாடகை எவ்வளவு என்பது குறித்து வீட்டு உரிமையாளர் வாடகைதாரருக்கு எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தும், வாடகைதாரர் தான் வீட்டை காலி செய்வது குறித்து எழுத்து பூர்வமாக வீட்டு உரிமையாளருக்கு தெரிவிக்காத பட்சத்தில், புதிய வாடகைக்கு வாடகைதாரர் ஒப்புக்கொண்டதாக கருதப்படும்.
* மூன்று மாத வாடகை தொகையையே முன் பணமாக பெற வேண்டும். வாடகைதாரர் வீட்டை காலி செய்து ஒப்படைக்கும்போது, வீட்டின் உரிமையாளர் முன்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.
* வீட்டு வாடகை ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்னர் பொதுவாக வாடகைதாரரை வீட்டை விட்டு காலி செய்ய முடியாது.
* இந்த சட்டம் நகர்புறங்களை சார்ந்த அனைவருக்கும் பொருந்தும். அதாவது, டவுன் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி, கார்போரேஷன் மற்றும் பெருநகரம் போன்றவை இதில் அடங்கும்.
வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையே வாடகை ஒப்பந்தம் குறித்து உடன்பாடு ஏற்படாத நிலையில்:
* வாடகைதாரர் இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், அது குறித்து வீட்டு உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதத்திற்கு பின்னரும் கூட வாடகை கொடுக்காத நிலையில்,
* வீட்டு உரிமையாளரின் எழுத்துபூர்வமான சம்மதம் இன்றி, வீட்டின் ஒரு பகுதியையோ அல்லது முழு வீட்டையோ பிறருக்கு கொடுக்கும் நிலையில்,
* வாடகைதாரர் பிறருக்கு தொந்தரவு கொடுப்பது, கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பது, வீட்டிற்கு சேதம் விளைவிப்பது, சட்டத்திற்கு புறம்பான வகையில் பயன்படுத்துவது போன்ற காரணங்களுக்காக வீட்டின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் கூட அவ்வாறே தொடரும் நிலையில்,
* வீட்டில் ரிப்பேர் செய்வது, வீட்டில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றிற்காக வீடு தேவைப்படும் நிலையில், அதாவது வீட்டை காலி செய்யாமல் அத்தகைய வேலைகளை செய்ய முடியாது என்ற நிலையில்,
* வீட்டின் உரிமையாளருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ தங்களின் சொந்த உபயோகத்திற்காக வீடு தேவைப்படும் நிலையில்,
* வாடகைதாரர் வீட்டை காலி செய்வதாக எழுத்துபூர்வமான நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் வீட்டை விற்பது போன்ற நடவடிக்கைகளை வீட்டு உரிமையாளர் எடுத்த பின், வாடகைதாரர் வீட்டை காலி செய்யாமல் இருக்கும் நிலையில்,
* அதாவது, மேலே கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், வாடகை நீதிமன்ற உத்தரவின் பேரில், வாடகை ஒப்பந்தம் காலாவதியாகாத நிலையிலும், வாடகைதாரரை வீட்டை விட்டு காலி செய்ய முடியும்.
* https://www.tenancy.tn.gov.in - என்ற தமிழ்நாடு அரசின் இணைய தளத்தில் சென்று, புதிய சட்டம் தொடர்பான தகவல்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வாடகை ஆணையங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை