வீடுகட்டும் போது - தண்ணீர் தொட்டி அமைக்கும் முறைகள்
* பெரும்பாலும் வாஸ்து முறைப்படி நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கு நிறையபேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் நீர்தேக்க தொட்டி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
* மொட்டை மாடியின் தரைத்தளத்துடன் இணைந்தபடியே சிலர் தண்ணீர் தொட்டியை அமைக்கிறார்கள். அப்படி அமைக்கக்கூடாது. ஏனெனில் தண்ணீரின் மொத்த எடையும் கான்கிரீட் தளத்தின் மீது இறங்கும். பொதுவாக 500 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் தேக்கும் அளவுக்கு தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் பார்ப்பதற்கு எடை குறைவாக இருப்பது போல் தோன்றும். ஒரு லிட்டர் தண்ணீரின் எடை ஒரு கிலோ என்று கணக்கிட்டாலும் 500 கிலோ எடையை தண்ணீரை தொட்டி சுமந்திருக்கும். இந்த பாரம் முழுவதையும் கான்கிரீட் தளத்தின் மீது ஏற்றுவது கட்டுமானத்துக்கு நல்லது கிடையாது.
* தண்ணீர் தொட்டி வைப்பதற்கு முடிவு செய்துவிட்டால் உடனே மொட்டைமாடி தளத்தில் சில அடி உயரத்துக்கு கான்கிரீட் தூண் எழுப்பிவிட வேண்டும். அந்த உயரங்கள் சரிசமமாக இருக்கும்படி கணக்கிட்டு அதனை சூழ்ந்து தொட்டி அமைப்பதற்கு ஏதுவாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அந்த கான்கிரீட் கலவை நீர் கசிக்கு இடம் கொடுக்காதவகையில் வலுவானதாக இருக்க வேண்டும்.
* பின்னர் கான்கிரீட் தளத்தின் நான்கு பகுதிகளிலும் தண்ணீர் தேக்குவதற்கு ஏற்ற வகையில் சுவர் எழுப்ப வேண்டும். வீட்டின் தண்ணீர் தேவையை கணக்கிட்டு போதுமான அளவுக்கு தேக்கி வைக்கும் வகையில் திட்டமிட்டு தொட்டியை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி கான்கிரீட் தூண், கான்கிரீட் கலவை வலுவானதாக அமைந்திருக்க வேண்டும்.
* சிலர் கான்கிரீட் தரத்தின் வலிமையை கணக்கில் கொள்ளாமல் தண்ணீர் தொட்டியின் கொள்ளளவை அதிகரித்து விடுவார்கள். இதுவும் கட்டுமான வலிமையை கேள்விக்குறியதாக மாற்றிவிடும்.
* தொட்டி அமைப்பதற்கு கான்கிரீட் தூண் அமைக்கும் விஷயத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. சிலர் மொட்டை மாடியின் மூலைப்பகுதியில் தொட்டி அமைக்கும்போது அங்கு இருக்கும் பக்கவாட்டு சுவரை தூணாக மாற்றி விடுவார்கள். அதனால் கான்கிரீட் தூண் அமைக்கும் செலவு குறையும் என்று கணக்கிடுவார்கள். நான்கு கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கு பதிலாக ஒரு தூண் மட்டும் அமைத்தால் போதும் என்று நினைப்பார்கள். அதுவும் தவறானது. சுவரில் பாரத்தை ஏற்றும்போது அதுவும் கான்கிரீட் தளத்தின் வலிமையை குறைப்பதாக அமைந்துவிடும்.
* மொட்டை மாடியில் இருக்கும் பக்கவாட்டு சுவர்கள் மீது சுமையை ஏற்றாமல் நான்கு தூண்களை அமைத்து அதன் மீதே தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும்.
* தொட்டியின் பக்கவாட்டு சுவர்கள் நீர் கசியாத வண்ணம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் குழாய்கள் பதிக்கப்படும் பகுதியிலும் நீர்க்கசிவு ஏற்படாதவாறு பூச்சுவேலைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தற்போது பிளாஸ்டிக் தொட்டிகள் அதிக அளவில் சந்தையில் கிடைக்கின்றன. அவைகளும் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டுகின்றன. அந்த தொட்டியையும் மொட்டை மாடியின் தரைத்தளத்தில் அப்படியே வைத்துவிடக்கூடாது. கான்கிரீட் சுவர் எழுப்பி அதன் மேல்பகுதியில் தான் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொட்டியில் இருக்கும் தண்ணீரின் மொத்த கொள்ளளவால் கான்கீரீட் தளத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
தண்ணீர் தொட்டிகளை அமைக்கும் வகைகள்:
மேல் தள நீர் தொட்டி:
* பொதுவாக ஒரு வீடு அல்லது கட்டிடம் அமைக்கும்போது ஆழ் துளை கிணறு ஏற்படுத்தி, அதன் மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் அல்லது கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.
* மாடி வீடு அல்லது அடுக்குமாடி வீடுகளில் தண்ணீர் தொட்டியை கான்கீரிட் மூலமாக அமைக்கலாம். இப்பொழுது, பிளாஸ்டிக் வாட்டர் டேங்குகள் பயன்படுத்துகின்றன.
* பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை வாங்குபவர்கள், நீலம், கருப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் உள்ள தொட்டியை வாங்கலாம். சூரிய கதிர்களை உறிஞ்சும் நிறத்தில் வாங்குவது நல்லது.
நிலத்தடி நீர் தொட்டி:
* அப்பகுதிகளில் அவசியமான வசதிகளை செய்து கொள்வதற்கு போதுமான இட வசதி இல்லாத நிலையில், இடத்தை கச்சிதமாக பயன்படுத்தி தேவையான கட்டமைப்புகளை செய்து கொள்ளவேண்டியதாக இருக்கும். அந்த நிலையில் குறைந்த பரப்பளவு கொண்ட தரைத்தள பகுதியில் தண்ணீர் தொட்டி மற்றும் ‘செப்டிக் டேங்க்’ ஆகியவை ஒன்றுக்கு ஒன்று மிகவும் அருகில் அமைக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்.
* பொதுவாக, நிலத்தடி தண்ணீர் தொட்டிகள் கட்டும்போது பெரும்பாலும் செங்கல் கட்டுமானமாக அமைக்கப்படுவதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதுபோன்ற தொட்டிகளை சுற்றிலும் 6 அல்லது 8 அடிகள் தொலைவுக்குள் செப்டிக் டேங்க் அமைப்புகள் இல்லாத நிலையில் அவை பாதிக்கப்பட பெரிதான வாய்ப்புகள் இருக்காது. ஆனால், மேற்கண்ட அளவுக்குள்ளாக அல்லது அதைவிட அருகிலோ இரண்டு தொட்டிகளும் அமைக்கப்பட வேண்டிய நிலையில் குடிநீர் தொட்டியை கண்டிப்பாக ஆர்.சி.சி முறைப்படிதான் அமைக்க வேண்டும்.
* அதாவது, கச்சிதமாக வடிவமைத்த கான்கிரீட் அமைப்புக்குள் என்பது நீர் உட்புக இயலாது. ஆனால், செங்கல் சுவருக்குள் சுலபமாக நீர் உட்புகுந்து மறுபுறமாக கசியக்கூடிய தன்மை கொண்டது. அதனால், தண்ணீர் தொட்டி அமைக்கும்போது தக்க விதத்தில் பாதுகாப்பான கட்டுமான முறையை பயன்படுத்தவேண்டியது அவசியம்.
* பொதுவாக, மேற்கண்ட சூழலில் நாலரை அங்குல செங்கல் சுவர் அமைத்து அதற்கு உட்புறமாக ‘சென்டரிங்’ அமைத்து, அதில் 4 அங்குல கான்கிரீட் சுவர் கட்டி தொட்டிகளை உருவாக்குவதுதான் பெரும்பாலான பொறியாளர்கள் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். கூடுதல் பாதுகாப்புக்காக ஆறு அங்குல சுவர் அமைப்பதோடு, சிறுவகை ஜல்லிகளையும் பயன்படுத்தலாம். மேலும், நீர் ஊடுருவாமல் தடுக்கும் அட்மிக்ஸர் ரசாயன பொருட்களை சிமெண்டில் போதிய அளவுகளில் கலந்து பயன்படுத்துவதும் அவசியம்.
* மேற்கண்ட முறையில் கான்கிரீட் தொட்டிகள் கட்டுவதை ஒரே நாளில் முடித்துவிட வேண்டும். கான்கிரீட் போடும் பணியில் பாக்கி வைத்து மறுநாள் செய்வது கூடாது. அவ்வாறு செய்யும்போது காலப்போக்கில், மறுநாள் செய்த பணியின் இணைப்புகளில் தண்ணீர் கசிவு ஏற்படலாம்.
* இரண்டு தொட்டிகளுக்கும் இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு இடையே ‘பிரிகாஸ்ட்’ முறையிலான ‘கான்கிரீட் ஷீட்’ அமைப்புகளை இடைவெளியில் நிறுத்திக்கொள்ளலாம். அதன் மூலமாக ஒருவித மன நிறைவு உண்டாவதுடன், கூடுதல் பாதுகாப்பாகவும் அமையும்.
* ஒரு சில இடங்களில் தரையடி தண்ணீர் தொட்டிகளுக்கு உட்புறத்தில் எளிதாக சுத்தம் செய்ய வசதியாக டைல்ஸ் வகைகளை பதிப்பது வழக்கத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்த முறையில் சுத்தப்படுத்துவது எளிது என்பதை தாண்டி வேறு பயன்கள் இல்லை என்பது பொறியாளர்கள் கருத்தாகும்.
கீழ்நிலை தொட்டி:
* பொதுவாக, தரைமட்டத்துக்கு கீழே 'சம்ப்' எனப்படும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள் அமைத்து, ‘போர்வெல்’ மற்றும் கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்படும் தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கமான ஒன்று.
* நகர்ப்புற அடுக்குமாடிகள் அல்லது தனி வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளிலும் நிலத்தடி கான்கிரீட் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதை சிக்கன செலவில் இப்போது செய்ய இயலும். அதாவது மேல் மாடிகளில் நாம் பரவலாக பார்க்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளை நிலத்திற்கு கீழ்ப்புறமாகவும் அமைத்து பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தொட்டி:
* மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து பல்வேறு நிறுவனங்கள், நிலத்தடி தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சிறப்பு வகை பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரித்து வருகின்றன. தற்போது 1,000 லிட்டர் முதல் 30,000 லிட்டர் வரை நீரை சேமிக்கக்கூடிய தொட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த முறையில் வழக்கமாக கட்டுமான பணியில் உருவாக்கப்படும் தொட்டிக்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் சேமிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கிடைமட்ட தொட்டி:
* மேற்கண்ட பிளாஸ்டிக் தொட்டிகளை தரையில் தேவையான ஆழத்துக்கு பள்ளம் எடுத்து அதில் அமைக்கலாம். 6,000 லிட்டர்களுக்கு மேற்பட்ட தொட்டிகளை கிடைமட்ட அமைப்பில் வைக்கும் வகையில் தயாரிக்கப்படுவதால், அதிக ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
* குறிப்பாக, மண்ணில் ஏற்படும் மாற்றங்கள் இந்த தொட்டிகளை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதுடன், 50 ஆண்டுகள் உழைக்கும் திறன் கொண்டவை. மேலும், சேமிக்கப்படும் தண்ணீரில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக உட்புறத்தில் சிறப்பு வகை ‘கோட்டிங்’ அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் காரணமாக கான்கிரீட் தொட்டிகளுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் நிலத்தடி தண்ணீர் தொட்டிகளை பயன்படுத்த கட்டுமான வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
வீடு கட்டும்போது தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் அளவுகளை கணக்கிடுவது எப்படி ?
* வீட்டில் அறைகளாக இருந்தாலும், வாசல் கதவாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் வாஸ்து பார்த்துதான் அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நாம் புதிய வீடு கட்டும்போது, நாம் வீட்டிற்கு திட்டம் போடும்போது நாம் அனைத்து ரூம் அளவுகளையும் இன்ச் அளவில் கணக்கிட்டு அமைக்கிறோம், கார் நிறுத்தும் இடத்தை கூட நாம் கணக்கிட்டு ஒதுக்குகிறோம், அதுபோல, முக்கிய தேவையான மேல்நிலை தண்ணீர் தொட்டி என்ன அளவு வேண்டும் என்று நாம் கணக்கிடுதல் மிகவும் அவசியமாகிறது.
* ஒப்பந்தகாரர் அவருக்கு என்ன அளவு ஒத்து வருகிறதோ அதை சொல்வார் நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு உடனே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
* ஏனெனில், பெரிய கட்டிடங்களுக்கு இன்ஜினீயர் அளவு கணக்கிட்டு திட்டத்தை கொடுத்து விடுவார்கள். ஒருவேளை, சிறிய வீடுகளை கட்டும்போது நாமேதான் கணக்கிட வேண்டும் அல்லது ஒரு இன்ஜினியரை அணுகி அவற்றின் அளவுகளை பெறலாம்.
மேல்நிலை தொட்டி அளவை எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம்:
* ஒரு நாளைக்கு ஒரு தனி மனிதனின் தண்ணீர் தேவை என்பது 135 லிட்டர் என கணக்கிடப்பட்டு உள்ளது. அவை என்னவென்றால்,
* குடிநீர் = 5 லிட்டர்
* சமையல் = 5 லிட்டர்
* குளிப்பதற்கும், கழிவறைக்கும் = 85 லிட்டர்
* துணி துவைப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும் = 30 லிட்டர்
* வீட்டை சுத்தப்படுத்துவற்கும் = 10 லிட்டர்
* குடும்பத்தில் 4 நபர்கள் என்றால், ஒரு நாளைக்கு, 135 x 4 = 540 லிட்டர் குடும்பத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
* மொத்த தண்ணீர் தேவையை நாம் கணக்கு எடுத்துவிட்டோம். இந்த அளவு கொள்ளளவை அறிந்துக்கொண்டால் போதும், அதற்கு நமக்கு தொட்டியின் நீளம், உயரம், அகலம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது நமக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
* கணக்கீட்டின்படி 1கன மீட்டர்க்கு 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
* எனவே நமக்கு தேவை = 540 / 1000 = 0.54 கனமீட்டர்.
* நாம் தொட்டியின் உயரம் 0.6 மீட்டர் என நாம் தேர்ந்து எடுத்து கொண்டால்,
* = 0.54 / 0.6 = 0.9 சதுர மீட்டர்.
* அகலம் 0.6 மீட்டர் என எடுத்து கொண்டால்,
* நீளம் = 0.9 / 0.6 = 1.5 மீட்டர் நீளம்.
* தொட்டியின் நீளம், உயரம், அகலம் = 1.5 x 0.6 x 0.6 ஆகும். இது தொட்டியின் உள் அளவு அதாவது நீர் பிடிக்கும் கொள்ளளவு, மொத்த நீளத்திற்கு சுவர்களின் அளவுகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
* இதுவே, பொதுவான தண்ணீர் தொட்டிக்கான அளவு ஆகும். இதைக்கொண்டுதான் தண்ணீர்தொட்டி அமைக்க வேண்டும்.
எங்கு அமைக்க வேண்டும்?
* தண்ணீர்த் தொட்டிகளை அமைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* ஒரு வீட்டில் அல்லது கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் அல்லது கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
* ஒரு வீட்டில் அல்லது கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.
கருத்துகள் இல்லை