கடன் & அரசுத்திட்டங்கள் - தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டுதல்
பசுமை வீடு திட்டம் (மாநில அரசு) :
* ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும்.
* நமது நாட்டிலேயே 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தி விளக்குகளுடன் கூடிய வீடுகள் வழங்குவது இதுவே முதன் முறையாகும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் :
* ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.
* ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையுடன் மாநில அரசின் முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.
* ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய வசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கட்டப்படுகிறது.
* ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் அடர்குறு விளக்குகள் (5) அமைக்கப்படும். இவை படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின் இணைப்பு பெறும் விருப்பத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 110 சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்தும்.
* பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் (அவன்/அவளின் வசிப்பிடத்தை மாற்றியமைத்து) அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்குச் சொந்தமான இடங்களில் கட்டித்தரப்படும்.
* மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
பயனாளிகளின் தகுதிகள் :
* சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
* 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
* குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரில் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனைப் பட்டா இருக்க வேண்டும்.
* தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.
* அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.
பயனாளிகள் தேர்வு செய்யும் முறை :
* ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோரின் நிரந்தர காத்திருப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும்.
* மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
* பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றமற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் துணை இராணுவப் படையினர் துறையினரால் அடையாளம் காணப்பட்ட கிராமப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
* தகுதியுள்ள ஏழை ஒருவரின் பெயர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டிருப்பின், விடுபட்ட நபர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர், விவரங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியரின் இசைவுடன் அவரது பெயரை பட்டியலில் இடம்பெற செய்து அதனை கிராமசபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்கப்படும் நிகழ்வில், அவரது பெயரானது நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் ஒரு பகுதியாக்கப்பட்டு பயனாளி தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும்.
* கிராம ஊராட்சிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கிராம சபையின் ஒப்புதலுக்காக வைக்கவேண்டும். பயனாளிகள் தேர்வு, வீடுகள் ஒதுக்கீடு, கட்டுமானப் பொருட்கள் விநியோகம் மற்றும் இத்திட்டம் தொடர்பான நடைமுறைபடுத்தப்படும்.
கருத்துகள் இல்லை