பொதுவான தகவல்கள் - பழைய வீட்டை வாங்கும் போது கவணிக்கப்படவேண்டியவை
பொதுவாக வீட்டு மனை வாங்கி, புது வீடு கட்டுவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. அதுவே கட்டிய வீட்டை வாங்குவது இன்னும் சிறப்பு. ஒருவர் தான் கட்டிய வீட்டை சில நாட்கள் பயன்படுத்திவிட்டு, அதை விற்றால்.. அதுவும் பழைய வீடுதான். ஆனால், அந்த பழைய வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது.
கவனிக்க வேண்டியவை
* குடியிருக்கின்ற வீட்டில் வில்லங்கம் ஏதுமிருக்காது என்று நினைக்காமல் பழைய வீட்டின் வில்லங்கச் சான்றிதழை வாங்கிப் பார்த்துவிடுவது நல்லது.
* தாய் பத்திரம், பட்டா, சிட்டா போன்ற முக்கிய ஆவணங்களை ஒரு வழக்கறிஞர் மூலம் சரிபார்க்க வேண்டும்.
* பொதுச் சுவர், நடைபாதை, பார்க்கிங் வசதிகள் போன்றவற்றில் வில்லங்கம் ஏதேனும் வந்துவிடாமல் ஒப்பந்தத்தில் தெளிவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
* உட்புறச் சாலைகள், மொட்டை மாடி, திறந்தவெளி மற்றும் இன்னபிற வசதிகள் குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்வது நல்லது.
* சுற்றுச்சூழல், மின்சார வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்திற்கான சாலை இணைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை பார்க்க வேண்டும்.
* அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும்போது லிஃப்ட் வசதி, பார்க்கிங் வசதி இவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என மேலே போகப் போக விலை குறைந்திருக்கிறதா? எவ்வளவு போகிறது என அருகிலுள்ளவர்களிடம் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
* பத்திரம் தொலைந்து விட்டது , டூப்ளிகேட் பத்திரம் வாங்கி இருக்கிறோம் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் உண்மையான பத்திரத்தை வங்கியிலோ, வேறு யாரிடமாவதோ அடமானம் வைத்திருக்கலாம்.
* சொத்து கைமாறுவதற்கு முன் வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவற்றை சரியாக கட்டியிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இவற்றுக்கான இணைப்பை உங்களின் பெயரில் மாற்றிக் கொள்ள பணம் கொடுக்கும் போதே கையெழுத்து வாங்கிக்கொள்வது அவசியம்.
* பழைய பத்திரத்தில் உள்ள அளவுகளையே புதிய பத்திரத்தில் எழுதுவது வழக்கமாக இருக்கிறது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீள, அகல அளவுகள், பரப்பளவு ஆகியவை சரியாக இருக்கின்றனவா என்பதை அளந்து பார்த்துவிடுவது நல்லது. ஏனெனில் பக்கத்தில் குடியிருப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம் அல்லது உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
* கட்டிடத்தின் ஆயுள் எவ்வளவு? அதாவது கட்டிடம் கட்டப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன? அவற்றின் கட்டுமான தரம் வலிமையாக இருக்கிறதா? என்பதை அனுபவமுள்ள சிவில் என்ஜினியரிடம் கேட்டு ஆலோசனை பெறுவது நல்லது.
* கட்டிடம் முறையான அனுமதி பெறப்பபட்டுள்ளதா? மனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளதா? பொது இடம் மற்றும் சாலை கால்வாய்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறதா? கட்டப்பட்டிருக்கும் முழுப்பரப்புக்கும் குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் ஆகியவை சரியாக இருக்கிறதா? என்பதை கட்டிட வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துகொள்ளவேண்டும்.
* பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செய்யும்போது பவர் கொடுத்தவரை நேரில் சந்தித்து விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். விற்பனை அதிகாரம் அளித்தவருக்கு அப்படி அளிக்கும் அதிகாரம் இருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பழைய வீட்டை விலை மதிப்பீடு செய்வது எப்படி?
* பழைய வீடு அமைந்துள்ள இடம், கட்டிடத்தின் ஆயுள், பராமரிப்பு, கட்டிய நிறுவனத்தின் தரம் இவையெல்லாம் பழைய வீட்டை மதிப்பிடுவதில் முக்கியமான அம்சங்கள். இவை எல்லாம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வீட்டை வாங்க முன்வரலாம். பொதுவாக, அந்தப் பகுதியின் சந்தை மதிப்பிலிருந்து 20 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை கட்டிடத்தின் ஆயுளைப் பொறுத்து வீட்டின் விலையைக் குறைத்து வாங்க வாய்ப்புள்ளது. வீடு கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தால் மதிப்பு இதைவிடவும் குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
* ஆனால், அப்படியான வீடுகளை வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும். வீடு பழுதடைந்திருக்கலாம். வீட்டைச் சரிசெய்ய அதிகம் செலவிட வேண்டியிருக்கும். மேலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு வங்கிகள் பெரும்பாலும் கடன் தர முன்வருவதில்லை.
* பல்வேறு விஷயங்களை ஆராயிந்த பிறகு தான் ஒரு வீட்டின் விலையை மதிப்பீடு செய்யமுடியும்.
கருத்துகள் இல்லை